உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அரசு ஊதியம் இல்லாத நிலையிலும், இந்த பதவிகளுக்கு போட்டியிட ஏராளமானோர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
அப்படி என்ன இருக்கிறது இந்த பதவியில்? எதற்காக இத்தனை போட்டா போட்டி என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்றால் கிராமங்களின் உயிர், உள்ளாட்சி அமைப்புகள். சட்டத்திற்கு உட்பட்டு, கிராமத்தில் எந்த பணிகளை வேண்டுமானாலும் ஊராட்சித் தலைவர் மேற்கொள்ளலாம்.
தொகுதி மேம்பாட்டுக்கு ஒதுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர் நிதிக்கே ஆட்சியர்தான் ஒப்புதல் தர வேண்டும்.
ஆனால், கிராமப்புறங்களில் சில பணிகளை ஊராட்சித்தலைவரே முடிவெடுத்து செய்யலாம். உள்ளாட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகள் இருந்தால்தான், மத்திய அரசு நிதியே கிடைக்கும்.
மத்திய மாநில அரசுகளின் 504-க்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளின் மூலம்தான் நிறைவேற்றப்படுகின்றன.
எனவேதான் இத்தகைய அதிகாரம் கொண்ட பதவிகளை பெற அரசியல் கட்சிகள் மல்லுக்கு நிற்பதாக கூறுகிறார், உள்ளாட்சி தொடர்பாக தொடர்ந்து எழுதி வரும் ஓய்வுபெற்ற பேராசிரியர் பழனிதுரை.
சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் போல் அல்லாமல், உள்ளாட்சி தேர்தலில் மண்ணின் மைந்தர்களே போட்டியிட முடியும். உள்ளாட்சி உறுப்பினர்,
அந்த பகுதி மக்களுக்கு தெரிந்தவர்களாகவே இருக்க வேண்டுமென்ற நோக்கமே இதற்கு காரணம். அதேநேரம் உள்ளாட்சி அமைப்பு பதவிகள் எதற்கும் ஊதியம் கிடையாது.
கேரளாவில் உள்ளாட்சி பதவிகளுக்கு ரூ.7000 முதல் 15,000 ரூபாய் வரை ஊதியம் தரப்படுகிறது. அதனால் அம்மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகள் உயிர்ப்போடு உள்ளதாக கூறுகிறார்,
உள்ளாட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தன்னாட்சி அமைப்பினர்.அதேநேரம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மூன்றாம் கட்டத்தில் உள்ள மாவட்ட வார்டு உறுப்பினர், ஊராட்சி உறுப்பினர் பதவிகள் தேவையற்றது என்று கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஷ்யாம்.
என்னதான் அரசியல், சாதிய கட்டமைப்பு, கவுரவம் சூழ்ந்திருந்தாலும் அதனையெல்லாம் தாண்டி, சேவை நோக்கத்தில் போட்டியிடும் நபர்களுக்கு மக்கள் ஆதரவு தரவே செய்கிறார்கள்.
எது எப்படி இருந்தாலும், அதிகாரம் கொண்ட உள்ளாட்சி அமைப்பை பற்றி மக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு தேவை.. பத்தோடு, பதினோன்றாக இத்தேர்தலை நினைக்கும் மனப்பான்மையை மக்கள் மாற்றினால், வளர்ச்சி உண்டாகும் என்பதில் ஐயமில்லை.