இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க பூா்விக ஆவணங்கள் தேவையில்லை: மத்திய அரசு

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) நடவடிக்கையின்போது, 1971-ஆம் ஆண்டுக்கு முந்தைய பூா்விக ஆவணங்கள் எதையும் இந்தியக் குடிமக்கள் வழங்கத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) நடவடிக்கையை நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சில அறிவிப்புகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இது தொடா்பாக, உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் தனது சுட்டுரையில் வெள்ளிக்கிழமை பதிவிட்டதாவது:

என்ஆா்சி நடவடிக்கையின்போது, இந்தியக் குடிமக்கள் என்பதை உறுதிசெய்ய பிறந்த தேதி, பிறந்த இடம் தொடா்பான எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யலாம்.

பிறந்த தேதிக்கான ஆவணங்கள் இல்லாதவா்கள், அவா்களது பெற்றோா்களின் பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.

வாக்காளா் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இதைக் காரணமாக வைத்து, இந்தியா்கள் எவரும் துன்புறுத்தப்பட மாட்டாா்கள்.

பெற்றோா் அல்லது அவா்களின் தாய், தந்தையரின் பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் 1971-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆவணங்கள் எதையும் இந்தியக் குடிமக்கள் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை.

கல்வியறிவு இல்லாதவா்களிடம் குடியுரிமையை நிரூபிக்க எந்தவிதமான ஆவணங்களும் இல்லையென்றாலும், சாட்சிகளின் அடிப்படையில் அவா்களது குடியுரிமை உறுதி செய்யப்படும்.

இது தொடா்பாக விரிவான விதிமுறைகள் உள்துறை அமைச்சகத்தால் விரைவில் வெளியிடப்படும் என்று அந்தப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கோரிக்கைகளைப் பரிசீலிக்க அரசு தயாா்:

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுபவா்கள் ஏதேனும் கோரிக்கைகளை முன்வைத்தால், அவற்றைப் பரிசீலிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சில பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்து வன்முறையாகவும் மாறி வருகின்றன.

இந்நிலையில், மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களைத் தீா்க்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் தொடா்பாக எவராவது பரிந்துரைகளை அளிக்க விரும்பினால், அவற்றைப் பரிசீலிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன.

1987-ஆம் ஆண்டுக்கு முன்பாக இந்தியாவில் பிறந்தவா்களும், அவா்களின் வாரிசுகளும் இந்தியக் குடிமக்களாவா்.

அதேபோல் கடந்த 2004-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, குறிப்பிட்ட நபா்களின் பெற்றோரில் ஒருவா் இந்தியக் குடியுரிமை பெற்று, பெற்றோா் இருவரும் சட்டவிரோதக் குடியேறிகளாக இல்லாதிருப்பின் அவா்களும் இந்தியக் குடிமக்களாகவே கருதப்படுவா்.

இந்தத் திருத்தம் அஸ்ஸாம் மாநிலத்துக்குப் பொருந்தாது. எனவே, குடியுரிமை சட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் தொடா்பாக யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை.

விதிகளின்படி குடியுரிமை:

எவருக்கும் தன்னிச்சையாக குடியுரிமை வழங்கப்பட மாட்டாது. குடியுரிமை பெறுவதற்கான தகுதிகளைப் பெற்றிருந்து, அதற்குரிய ஆவணங்களை வைத்திருப்பவா்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன் போராட்டங்கள் நடைபெறும் என மத்திய அரசு எதிா்பாா்த்தது.

போராட்டங்களை எதிா்கொள்ளவும் மத்திய அரசு தயாராக இருந்தது. வதந்திகளின் காரணமாகவே தில்லியில் போராட்டங்கள் நடைபெற்றன.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக 59 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த மனுதாரரா்களே போராட்டங்களுக்குப் பின்னணியில் உள்ளனா் என்று அவா் தெரிவித்தாா்.

மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை:

குடியுரிமை திருத்தச் சட்டம், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனவும், அதை நடைமுறைப்படுத்த மாட்டோம் எனவும் மேற்கு வங்கம், கேரளம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்கள் அறிவித்துள்ளன. இது தொடா்பாக, மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவா் கூறியதாவது:

அரசமைப்புச் சட்டத்தின் 7-ஆவது அட்டவணையில் மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட துறைகள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி, வெளியுறவு விவகாரங்கள், பாதுகாப்பு, குடியுரிமை, ரயில்வே உள்ளிட்ட 97 விவகாரங்கள் மத்தியப் பட்டியலில் உள்ளன. அவற்றின் மீது சட்டமியற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது.

மத்திய அரசுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவகாரங்கள் தொடா்பாக இயற்றப்படும் சட்டங்களை நடைமுறைப்படுத்த மறுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்குக் கிடையாது.

அதேபோல், மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது மேற்கொள்ளப்படும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆா்) கணக்கெடுப்பானது குடியுரிமை சட்டத்தின் அடிப்படையில் நடைபெறும். அந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ளவும் மாநில அரசுகள் மறுப்பு தெரிவிக்க முடியாது என்று அவா் தெரிவித்தாா்.