தீர யோசித்த பின்னரே ட்விட்டரில் பதிவிட வேண்டும் என்று அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் அதிபர் ட்ரம்பின் பெயரைக் குறிப்பிடாமலேயே அவரை விமர்சித்தார் ஒபாமா.
டெல்லியில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஒபாமாவிடம், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களின் தாக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஒபாமா, ட்விட்டரை அதிக அளவில் பயன்படுத்தும் சிலரை விட தமது ட்விட்டர் கணக்கை 10 கோடி பேர் பின்தொடர்வதாக கூறினார். அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ட்ரம்பையே, ட்விட்டரை தம்மை விட அதிகமாக பயன்படுத்துவோர் என அவர் சூசகமாக குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.
மேலும், ட்விட்டரில் பதிவிடும் முன்னர் அந்தக் கருத்து குறித்து முதலில் தெளிவாகச் சிந்திக்க வேண்டும் என்றும், மனதில் தோன்றியதை அப்படியே குறிப்பிடக் கூடாது என்றும் ஒபாமா அப்போது கூறினார். கருத்துகளை சுயமாக சரிபார்த்த பின்னரே பதிவிட வேண்டும் எனவும் அவர் அறிவுரை கூறினார். அந்தப் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால், வாழ்க்கையிலும் அது பிரதி பலிக்கும் (தீர ஆலோசித்த பின்னர் ஒரு செயலைச் செய்வது) என்றும் ஒபாமா கூறினார். மேடைப் பேச்சிலும், உரையாடலிலும் தேர்ந்தவரான ஒபாமா, அவரது பாணியிலேயே, ட்ரம்பின் அரைவேக்காட்டுத் தனத்தை சாடியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். பெயரைச் சொல்லி விமர்சிப்பதற்கான தகுதி கூட ட்ரம்பிற்கு இல்லை என்பதையும், ஒபாமா உணர்த்தியிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
Obama slams Trump without naming him