மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற அழுத்தம் தரக்கோரி, சோனியா காந்தி உள்ளிட்ட 13 தலைவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம், மத்திய – மாநில அரசுகளின் சுகாதாரத் துறை அதிகாரிகள், இந்திய மருத்துவக் கவுன்சில் என மூன்று தரப்புக் குழு அமைத்து, கலந்தாலோசித்து இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் மூன்று மாதங்களில் முடிவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 29), இந்தத் தீர்ப்பு தொடர்பாக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கோரி 13 தலைவர்களிடம் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பேசினார்.
ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய 13 தலைவர்கள்
சோனியா காந்தி – தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ்
சீதாராம் யெச்சூரி – பொதுச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
டி.ராஜா – பொதுச்செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தேவகவுடா – தலைவர், மதச்சார்பற்ற ஜனதா தளம்
லாலு பிரசாத் யாதவ் – தலைவர், ராஷ்டிரிய ஜனதா தளம்
ஜெகன் மோகன் ரெட்டி – தலைவர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்
கே.சந்திரசேகர் ராவ் – தலைவர், தெலங்கானா ராஷ்டிர சமிதி
உத்தவ் தாக்ரே – தலைவர், சிவசேனா
மம்தா பானர்ஜி – தலைவர், அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்
மாயாவதி – தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி
அகிலேஷ் யாதவ் – தலைவர், சமாஜ்வாதி கட்சி
சரத் பவார், தலைவர், தேசியவாத காங்கிரஸ் கட்சி
உமர் அப்துல்லா, துணைத் தலைவர், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
இதுகுறித்து, திமுக தலைவர் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், “சென்னை உயர் நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினையடுத்து, முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டேன்.
- உடனடியாக, கமிட்டிக் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசை வலியுறுத்துவது
- அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் அளித்துள்ள மருத்துவ இடங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவது
- மாநில இட ஒதுக்கீட்டுச் சட்டங்களைப் பாதுகாப்பது ஆகிய கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரினேன்” எனப் பதிவிட்டுள்ளார்.