
அக்.2ம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. புதிய அரசு அமைந்த பிறகு, இந்த கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய அரசும் கிராம சபை கூட்டம் நடத்த தடை விதித்தது.
இந்த நிலையில் திமுக ஆட்சியில் முதல் முறையாக வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி நாளில் கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கிராம சபை கூட்டம் நடைபெறும் இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால், இந்த 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கிராம சபை கூட்டங்களை நடத்தலாம் என்றும் தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.