முக்கிய செய்திகள்

ஓகி புயல் கோரத் தாண்டவம்: குமரியில் இயல்பு வாழ்க்கை முடங்கியது..


ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் உருவான ஓகி புயலால் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது. மழையோடு பலத்த காற்றும் வீசியதால் ஏற்பட்டுள்ள சேதத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஓகி புயலால் தொடர்ந்து இரண்டு நாட்களாக கன்னியாகுமரியில் கனமழை கொட்டியது. கனமழையோடு சூறைக்காற்றும் வீசியது. கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், பழையாறு உடைந்து சுசீந்திரம், நங்கைநல்லூர், பூதப்பாண்டி ஆகிய 20க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.
சூறைக்காற்று காரணமாக கன்னியகுமரி மாவட்டத்தில், 10000க்கும் அதிகமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதனால் தமிழக – கேரள எல்லையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால், வாகனங்கள் பயணிக்கமுடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன. நாகர்கோவில் – திருவனந்தபுரம் , நாகர்கோவில் – கன்னியாகுமரி ஆகிய மார்க்கங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
கனமழை மற்றும் சூறைக்காற்று காரணமாக பல இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதனால் மின்சார சேவை துண்டிக்க்கப்பட்டு உள்ளது. மேலும், தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டு உள்ளதால், மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். பல இடங்களில் மரங்கள் முறிந்து வீடுகளின் மேல் விழுந்துள்ளன.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் துரித கதியில் நடந்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அவசரகால தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்புத்துறை வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கக்கோரி முதல்வர் மற்ற அமைச்சர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.