‘
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ “தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சாத்தியமில்லை” என்று தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், “அரசியல் சட்டத் திருத்தங்களை மக்களவையிலோ அல்லது மாநிலங்களவையிலோ கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு போதுமான எண்ணிக்கை இல்லை” என்றும் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், சண்டிகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தற்போதைய ஆட்சிக் காலத்துக்குள் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை அமல்படுத்தும் என்ற செய்திகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ப.சிதம்பரம், “‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது தற்போதைய அரசியலமைப்பின் கீழ் சாத்தியமில்லை. அதற்கு குறைந்தபட்சம் ஐந்து அரசியலமைப்பு திருத்தங்கள் தேவை. அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை மக்களவையிலோ அல்லது மாநிலங்களவையிலோ வைக்கும் அளவுக்கு மோடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதற்கு அரசியலமைப்பு ரீதியில் தடைகள் அதிகம். எனவே, அது சாத்தியமில்லை. இண்டியா கூட்டணி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பதை முற்றிலும் எதிர்க்கிறது” என தெரிவித்தார்.
ஹரியானாவின் குருஷேத்ராவில் நேற்று (செப்.15) நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இடஒதுக்கீட்டை நிறுத்த காங்கிரஸ் விரும்புவதாக குற்றம் சாட்டியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ப.சிதம்பரம், “இடஒதுக்கீட்டை ஏன் ஒழிக்க வேண்டும்? 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று நாங்கள்தான் சொல்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள்தான் கேட்கிறோம். மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். பிரதமர் கூறுகிறார் என்பதற்காக அவர் கூறும் அனைத்தையும் நம்பாதீர்கள்” என்று கூறினார்.