முக்கிய செய்திகள்

ஓபிஎஸ் முதல்வர் பதவிக்கு துடிக்கிறார் : டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..


முதல்வர் பதவியை அடைவதற்காக பிரதமர் பெயரைக் கூறி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஏமாற்றுகிறார் என டிடிவி. தினகரன் குற்றஞ்சாட்டினார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு என்னை வந்து சந்தித்தார். இவரது மனநிலையிலேயே அனைத்து எம்எல்ஏக்களும் உள்ளனர். அனைவரும் என்னுடன் தொடர்பில்தான் இருக்கின்றனர். முதல்வர் கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் துரோகம் செய்தவர்கள். 6 பேர் தவிர, யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம்.

நான் ஆட்சியை மாற்றி அமைக்க நினைக்கிறேன். நிறைய எம்எல்ஏக்கள் இந்த ஆட்சி முழுமையாக நீடிக்க வேண்டும் என நினைக்கின்றனர்.

முதல்வர் பழனிசாமியின் ஆட்சி கவிழ்ந்தாலும், மீண்டும் அதிமுகதான் ஆட்சிக்கு வரும். யார் கட்சி தொடங்கினாலும் மக்கள்தான் தீர்மானிப்பர். முதல்வர், துணை முதல்வர் உட்பட 6 பேர் விலகினால், எங்களிடம் உள்ள 18 எம்எல்ஏக்களில் ஒருவர்தான் முதல்வர். எனக்கு பதவி ஆசை இல்லை.

பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து மாற்றிவிட்டு, தான் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் துடிக்கிறார். அவர் முதல்வராக வேண்டும் என்ற நோக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி கட்டாயப்படுத்தியதால் கட்சியில் இணைந்தேன் என கூறி பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் முக. ஸ்டாலின், ஓபிஎஸ் பேசியது பற்றி ஒன்றும் கூறாதவர்கள், நான் ஸ்டாலினுடன் பேசியதை பற்றி மட்டும் தவறாக கூறுகின்றனர் என்றார்.

பிரியாணி பொட்டலம் வீச்சு

திருநெல்வேலி செல்லும் வழியில், விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டியில் தினகரனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்க சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் வந்தனர்.

காலை சுமார் 11 மணிக்கே அவர்கள் வந்ததால் அனைவருக்கும் பிற்பகலில் பிரியாணி பார்சல் வழங்கப்பட்டது. அப்போது, வேனில் இருந்து பிரியாணி பொட்டலங்கள் வீசப்பட்டதால் அதை பிடிக்க அங்கிருந்தவர்கள் முண்டியடித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, தங்களுக்கு பிரியாணி கிடைக்கவில்லை என பல பெண்கள் கட்சி நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தனர். பின்னர், மற்றொரு வேனில் பிரியாணி கொண்டு வரப்பட்டு, அங்கு கூடியிருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.