ஓரினச் சேர்க்கையை குற்றமாகக் கருதும் பிரிவு மறுஆய்வு : உச்சநீதிமன்றம் பரிந்துரை..


ஓரினச் சேர்க்கையை குற்றமாகக் கருதும் இந்திய தண்டனைச் சட்டம் 377ஆவது பிரிவை மறுஆய்வு செய்ய ஒப்புக்கொண்டுள்ள உச்சநீதிமன்றம், விரிவான அமர்வின் விசாரணைக்கும் பரிந்துரை செய்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் 377ஆவது பிரிவின்படி ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த சட்டப்பிரிவு செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும் இதுதொடர்பான மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், 2013ஆம் ஆண்டு டிசம்பரில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது.

இந்நிலையில், ஓரினச்சேர்க்கையாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் விசாரித்த 3 நீதிபதிகள் அமர்வு, கடந்த ஆகஸ்டில் அந்தரங்கம் பேணும் உரிமையை அடிப்படை உரிமையாக அறிவித்த தீர்ப்பை கணக்கில் எடுத்துக் கொண்டு கருத்துகளை தெரிவித்தது.

377ஆவது பிரிவை ரத்து செய்யக் கோரும் இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வுக்கு பரிந்துரைத்த நீதிபதிகள், மத்திய அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.