உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு கமல் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
உடல் உறுப்பு தானத்தின் வழியாக, நுாற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில், நாட்டின் முன்னணி மாநிலமாக, தமிழகம் தொடர்ந்து விளங்கி வருகிறது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வரும் குடும்பங்களின், தன்னலமற்ற தியாகங்களால் தான், இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களை காப்போரின் தியாகத்தை போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதி சடங்குகள், இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
முதலமைச்சரின் இத்தகைய முயற்சிக்கு தலைவர்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எஸ்க்ஸ் பக்க செய்தியில், பிரியத்திற்குரிய குடும்ப உறுப்பினர் மூளைச்சாவு அடைந்த துயர நிலையிலும், அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்து பிற உயிர்களைக் காக்க முன்வருவது மகத்தான தியாகம். இந்தத் தியாகத்தைப் போற்றிடும் வகையில் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் எனும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். இந்த அறிவிப்பு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.