ஒரு குப்பை கதை : திரை விமர்சனம்..

ஒரு குப்பை கதை


வாரம் வாரம் வெள்ளிக் கிழமை வெளியாகும் படங்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லை. ஆனால் பெரிதளவில் சில படங்களுக்கு விளம்பரம் இல்லையென்றாலும் கதையால் ஈர்க்கப்படுகின்றன. அந்த வகையில் ஒரு குப்பை கதை வெளியாகியுள்ளது. வாருங்கள் குப்பைக்குள் என்ன கிடக்கிறது என கிண்டி பார்க்கலாம்.

கதைக்கரு

படத்தின் ஹீரோ தினேஷ் ஒரு சாதாரண கார்ப்பொரேஷன் தொழிலாளி. குப்பை அள்ளும் தொழில் செய்து வருகிறது. ஒரே ஒரு அம்மாவுடன் கூவத்தில் வாழ்ந்து வருகிறார்.

எங்கெங்கோ பெண் தேடி அலைந்த இவருக்கு கடைசியில் மலைவாழ் கிராம பெண் மனைவியாகிறார். அதுவும் எப்படி? ஆயிரம் பொய்களை சொல்லி கல்யாணம் செய்வார்களே அது போல தான்.

தன் கணவர் மீதான வேறொரு கனவுடன் அழகான கிராமத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமான கூவத்திற்கு குடும்பம் நடத்த வருகிறார் ஹீரோயின் மனிஷா (பூங்கொடி கேரக்டர்).

கணவர் பற்றி சில உண்மைகள் தெரியவர பிரச்சனை வெடிக்கிறது. ஆனாலும் காலப்போக்கில் குழந்தை பிறக்க வேறு இடத்திற்கு தம்பதியாக அடுக்கு மாடி குடியிருப்பில் குடிபெயர்கிறார்கள்.

ஒரு நாள் திடீரென பூங்கொடியையும், குழந்தையையும் காணவில்லை. இவர்களை தேடி தினேஷ் அலைய பின் ஒருவர் மூலம் வந்த நம்பமுடியாத தகவலால் அதிர்ச்சியாகிறார்.

பூங்கொடிக்கு நடந்ததென்ன, குழந்தையும் தாயும் என்ன ஆனார்கள்? மீண்டும் மனம் ஒன்று பட்டு குடும்பமாக சேர்ந்தார்களா என்பதே இந்த குப்பை கதை.

 

படம் பற்றி ஒரு பார்வை

நாயகன் தினேஷ் ஒரு டான்ஸ் மாஸ்டர். இவர் இந்த படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவில் முகம் காட்டியிருக்கிறார். அவரின் இந்த முயற்சியை முதலில் வரவேற்போம். படத்தின் அவருக்கான ரோல் ஆழமானது. குப்பையில் வேலை செய்பவர்கள் படும் அல்லல்களை எளிமையாக சொல்லி புரியவைக்கிறார்.

சில ஆண்கள் என்ன நடந்தாலும் தங்கள் எதார்த்தமான அன்பால் பெண்களால் ஏமாற்றப்படுவதும், அதை மன்னித்து ஏற்பதற்கு மனம் வேண்டும் என சிம்பிளாக சொல்லி ஆண்களில் கைதட்டல் வாங்குகிறார்.

ஹீரோயின் மனிஷா யாதவ் சில படங்களில் முன்பே நடித்திருந்தாலும், இப்படத்தில் ஒரு முழு ஹீரோயினாக இறங்கியுள்ளார். இப்படத்திற்கு பின் அவருக்கு இன்னும் நிறைய படங்கள் கிடைக்கும் என தோன்றுகிறது.

படத்தில் நண்பனாக ஒரு காமெடியன். அவர் வேறு யாருமல்ல. யோகி பாபு தான். தியேட்டரில் அவர் வந்தாலே தானாக சிரிப்பு வழிந்தோடும். ஆனால் இப்படத்தில் அது மிஸ் ஆகிவிட்டதோ என நினைக்க வைத்தது.

கதைக்குள் குறுக்கிடும் ஒரு நபரை வில்லன் போல காண்பித்து கடைசியில் அங்கேயும் ஒரு டிவிஸ்ட். அவர் வேறுயாருமல்ல. நம்ம நந்தினி சீரியல் நடிகர் கிரண். தனக்கான ரோலில் நன்றாக நடித்திருக்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஜோஸ்வா ஸ்ரீதரின் பாடல்கள் காதுக்கு இனிமை. ஆனால் பின்னணி இசை பெருமளவில் இல்லை. ஒளிப்பதிவு காட்சிகள் படத்திற்கு போதுமானதாக இருந்தது.

குப்பை நிறைந்த சமூகத்தில் வாழ்ந்தாலும் குணம் குப்பையாகி விடக்கூடாது என இயக்குனர் சிம்பிளாக காட்டியிருக்கிறார்.

ப்ளஸ்

தினேஷ், மனிஷா யாதவின் எதார்த்தமான நடிப்பு..

சரியான நேரத்தில் கவுண்டர் கொடுத்து அசத்தும் எலெக்‌ஷன் பாட்டி.

ஜோஸ்வாவின் அழகான டூயட் பாடல்..

மைனஸ்

யோகிபாபு இருந்தும் படக்குழுவினர் அவரை பயன்படுத்தவில்லை.

குப்பைக்குள்ளும் விசயம் இருக்கிறது. மொத்தத்தில் ஒரு குப்பை கதை பார்க்க வேண்டிய கதை.