இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் இடஒதுக்கீடு தொடர்பான அரசமைப்பு சட்ட உரிமைகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி,
பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு எட்டப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் ஆயிரத்து 550 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
ஜர்சுகுடாவில் சரக்குபோக்குவரத்து பூங்கா, ஜர்சுகுடா – விஜயநகரம், சம்பல்பூர் – அங்குல் பிரிவுகளில் மின்மயமாக்கப்பட்ட ரயில்பாதைகள், புதிய ரயில் அகலப்பாதைகளை,
ரயில்வே பாலம் உள்ளிட்டவற்றை அவர் தொடங்கி வைத்தார்.வரலாற்றுச்சிறப்புமிக்க, பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதற்கான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
பின்னர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் பற்றி குறிப்பிட்டார்.
ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினரின் இடஒதுக்கீட்டுக்கான அரசமைப்புச்சட்ட உரிமையில் கைவைக்காமலேயே,
அந்த உரிமைகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி இந்த பணி செய்து முடிக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
கூட்டு முயற்சி-அனைவருக்கும் வளர்ச்சி என்பதன் மூலமே சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் சமவாய்ப்புகளை பெற முடியும் என்றும்,
சமவாய்ப்புகள் கிடைக்காதபோது சமூகத்தில் பிளவுகள் அதிகரிக்கும் என்றும் மோடி தெரிவித்தார்.
நலத்திட்டங்களில் ஊழலை ஒழிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய பிரதமர்,
கடந்த 4 ஆண்டுகளில் அரசுத் திட்டங்களில் 6 கோடி போலிப் பயனாளர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டிருப்பதாகவும்,
இதன் மூலம் 90 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
முறைகேடுகள் மூலம் வருவாய் ஈட்டி வந்தவர்கள் தம் மீது நிச்சயம் கோபத்தில் இருப்பார்கள் என்று கூறிய பிரதமர், அத்தகையோர் கண்களில் தாம் முள்ளாய் உறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு முன்பிருந்த அரசுகள் நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் அக்கறை காட்டவில்லை என குற்றம்சாட்டிய மோடி,
கடந்த 4 ஆண்டுகளில் பழமையான சிலைகளை மீட்டுக் கொண்டுவருவதற்கு தீவிர முயற்சிகள் எடுத்திருப்பதாகவும், பல சிலைகள் மீட்டுக் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
ஒற்றுமைச் சிலை, சிவாஜி நினைவுச் சின்னம், அம்பேத்கர் சிலை ஆகியவற்றையும் விமர்சிப்பதாக சாடினார்.
அந்தமானில் சில தீவுகளுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரை அறிவித்தபோது எதிர்க்கட்சியினருக்கு தூக்கம் போய்விட்டதாகவும் பிரதமர் கூறினார்.