வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உள்துறை அமைச்சகம் அனுமதி…

வெளி மாநில தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுப் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது.

இதனால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவனங்களும் செயல்படாத நிலை ஏற்பட்டதால், தங்கும் இடம், உணவு உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யவும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

அதேபோல், ஆன்மீகப்பயணம் மேற்கொண்டவர்கள், பிற நோக்கங்களுக்காக வெளி மாநிலம் சென்றவர்களும் ஊர் திரும்ப முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

சில இடங்களில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.

குறிப்பாக மராட்டியத்தில் இந்தப்பிரச்சினை அதிக அளவு காணப்பட்டது. சில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடைபயணமாக சென்ற செய்திகளும் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

ஊரடங்கால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோர், ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் செல்ல முடியாமல் பல்வேறு இடங்களில் தவித்து வருகின்றனர்.

அவர்கள் சொந்த ஊர் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக அனைத்து மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் இதற்கென நிலயையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

மாநிலம் விட்டு மாநிலத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் செல்லும் போது இரு மாநிலங்களுக்கு இடையேயும் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும்.

இடம் பெயரும் நபர்கள் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அறிகுறியற்றவர்களை மட்டுமே இடம் பெயர அனுமதிக்க வேண்டும். குழுக்களாக செல்வதற்கு பேருந்துகளை பயன்படுத்தலாம்.

பேருந்துகள் முழுமையாக கிருமி நாசினிகளை கொண்டு தூய்மைப் படுத்த வேண்டும். அதேபோல், இருக்கையில் உரிய சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

இடம்பெயரும் நபர்கள் தங்கள் இருப்பிடங்களை அடைந்தவுடன், உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

வீட்டுக்குள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், இடம் பெயரும் நபர்கள் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்தத வலியுறுத்த வேண்டும்.

அவர்களின் உடல் நலம் கண்காணிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.