முக்கிய செய்திகள்

பாஜகவை வெளியேற்றி நாட்டைப் பாதுகாப்போம்: மம்தா பானர்ஜி ஆவேசம்..


2019-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 42 இடங்களையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றும்.

பாஜகவை மத்தியில் பதவியில் இருந்து வெளியேற்றி இந்த நாட்டைப் பாதுகாப்போம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பல்வேறு போராட்டங்களில் உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலியும், நினைவுக்கூட்டமும் கொல்கத்தாவில் இன்று நடந்தது.

திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் சந்தன் மித்ரா: 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் ஐக்கியம்
இதில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

”2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் வெற்றிபெறும். இது செய்வதற்கு நாம் உறுதி எடுக்க வேண்டும். வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, இதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் சபதம் ஏற்க வேண்டும்.

ஆகஸ்ட் 15-ம் தேதி நமது தேசியக்கொடியை அனைத்து தொண்டர்களும் கையில் ஏந்தி, சபதம் எடுத்து, அடுத்த 2019-ம் ஆண்டில் டெல்லி செங்கோட்டையில் பாஜகவினர் யாரும் தேசியக் கொடியை ஏற்றவிடக்கூடாது என்று சபதம் ஏற்க வேண்டும்.

2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் கொல்கத்தாவில் மிகப்பெரிய பேரணியை நடத்துவோம். எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் அழைத்து அந்தப் பேரணியை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்துவோம்.

மத்தியில் ஆட்சியைப் பிடிப்பது நமது நோக்கமில்லை, இலக்கும் இல்லை. மத்தியில் ஆளும் பாஜகவை வெளியேற்ற வேண்டும். அவர்களிடம் இருந்து இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

மிட்நாபூரில் பாஜகவினர் மிகப்பெரிய அளவில் கூட்டம் நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் போடப்பட்டு இருந்த மேடை திடீரென சரிந்து விழுந்தது. ஒரு பந்தலைக் கூட ஸ்திரமாக அமைக்க முடியாத பாஜகவினர் எப்படி நாட்டைக் கட்டமைக்கப்போகிறார்கள்.
பாஜகவுக்கு நாடு முழுவதும் எழுந்துவரும் அதிருப்தியால், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், பிஹார், ஒடிசா, மேற்கு வங்கம், தமிழகத்தில் மக்களவைக்கான இடங்கள் குறைந்து வருகின்றன.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது, பாஜகவுக்கு இந்த முறை 325 வாக்குகள் இருந்தன. உறுப்பினர்கள் ஆதரவு இருந்தது. ஆனால், அடுத்த தேர்தலில் பாஜகவுக்கு 100 இடங்கள் வரை குறையக்கூடும்.”

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்