முக்கிய செய்திகள்

இதுவா வளர்ச்சி?: ட்விட்டரில் புள்ளி விவரங்களுடன் கேள்வி எழுப்பி இருக்கும் ப.சிதம்பரம்

ஜிடிபி (GDP) எனப்படும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறியீடு 8.2 சதவீதமாக 2018-19 நிதியாண்டின் முதல் காலாண்டில் அதிகரித்திருப்பதாக பாஜகவினர் துள்ளிக் குதித்து கொண்டாடி வரும் நிலையில், அது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார் ப.சிதம்பரம். இதுகுறித்து ட்விட்டரில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ள கருத்துகள் இதோ… 

அப்பாடா! 21 மாதங்கள் கழித்து ஒரு வழியாக ரிசர்வ் வங்கி செல்லாத ரூபாய் தாள்களை எண்ணி முடித்துவிட்டது. அவர்களைப் பாராட்டுவதா அல்லது நம் தலையில் அடித்துக்கொள்வதா?

ரூ 15,42,000 கோடி மதிப்பு தாள்களில் ரூ 15,31,000 கோடி தாள்கள் திரும்பி வந்துவிட்டன! கறுப்புப் பணமெல்லாம் வெள்ளையாகிவிட்டது!

பண முதலைகளின் கறுப்புப் பணத்தை எளிதாக மாற்றி வெள்ளைப் பணமாக்குவதற்கு மோடி அரசு கண்டு பிடித்த வழிதான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை.

பணமதிப்பு நீக்கம் என்பது ஒரு மோசடி நடவடிக்கை. அதற்கு இந்திய மக்கள் பட்ட துன்பமும் கொடுத்த விலையும் மிக அதிகம்

100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 15 கோடி அன்றாடம் வேலை செய்து பிழைப்போர் (அவர்களை நம்பி 45 கோடி மக்கள்) பல வாரங்கள் வருமானம் இழந்தனர், கடன் பட்டனர்.

பல இலட்சம் சிறு, குறு தொழில்கள் (தமிழ்நாட்டில் மட்டும் 50,000) மூடப்பட்டன. ஒன்றரைக் கோடி பேர் (தமிழ்நாட்டில் மட்டும் 5,00,000) வேலையிழந்தனர்.

அரசு நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை, மக்கள் மீது துன்பத்தைச் சுமத்தக்கூடாது.

பணமதிப்பு நீக்கத்தின் காரணமாக இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட இழப்பு ரூ 2,25,000 கோடி. இந்த ஒரு நடவடிக்கைக்காக மட்டுமே திரு நரேந்திர மோடி அரசுக்கு எதிராக மக்கள் திரள வேண்டும்.

2017-18 முதல் காலாண்டின் வளர்ச்சி 5.6 சதவீதமாக இருந்ததால் (கடந்த 8 காலாண்டுகளில்  மிகக்குறைந்த வளர்ச்சி விகிதம் அதுதான்), அதில் இருந்து ஜிடிபியை கணக்கிடும் போது 8.2 சதவீதமாக உள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும். இதனால், அடுத்தடுத்து வரும் காலாண்டுகளின் வளர்ச்சி விகிதம் சரிவைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. ஆண்டு வளர்ச்சி கடந்த ஆண்டின் அளவிலேயோ, அதைவிடக் குறைவாகவோ இருக்கக் கூடும். அதனால், வளர்ச்சி அதிகரித்து விட்டதாக இப்போதே கொண்டாடுவது பொருத்தமற்றது.

2017-18 முதல் காலாண்டின் மிகக் குறைந்த வளர்ச்சி விகிதம் 5.6 என்பதில் இருந்து கணக்கிட்டதே தற்போதைய முதல் காலாண்டின் வளர்ச்சி விகிதம் 8.2 என பெரிய அளவில் தோற்றமளிப்பதற்குக் காரணம் என்ற விளக்கத்தை முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் ஏற்றுக் கொண்டுள்ளார். அதற்காக அவருக்கு நன்றி.

8.2 சதவீத வளர்ச்சி என்பது புள்ளிவிவரம். ஆனால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி 70 ஆக சரிந்துவிட்டது என்பது யதார்த்தம். டெல்லியில் ஒரு லிட்டர் டீசலின் விலை  ரூ.70.21. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.78.52.

காலாண்டுகளுக்கு இடையிலான  வளர்ச்சிக் குறியீடுகளை ஒப்பீடு செய்வது உண்மையான போட்டியில்ல

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி -2 (பாஜக) அரசின் முழுமையான ஐந்தாண்டு ஆட்சி வளர்ச்சி விகிதத்துடன், காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ -1 மற்றும் ஐமுகூ -2 அரசுகளின் ஆட்சிக் கால வளர்ச்சிகளை ஒப்பிட்டுப் பார்ப்பதே உண்மையான போட்டியாக இருக்கும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசில் வழங்கப்பட்ட கடன்களில் பெரும்பாலானவே வாராக்கடன்கள் ஆகிவிட்டதாக பிரதமர் மோடி கூறுகிறார். அப்படி எத்தனை கடன்கள் கண்டறியப்பட்டுள்ளன, 2014க்குப் பின்னர் வழங்கப்பட்ட கடன்களின் வாராக் கடன்களாக மாறியது எவ்வளவு என்பது குறித்தெல்லாம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

P.Chidambaram Raise questions about GDP growth and demonetisation