முக்கிய செய்திகள்

பத்மாவத் – திரை விமர்சனம்…

பத்மாவத் திரை விமர்சனம்…


இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி பல இடங்களில் கலவரங்கள் வெடித்து மிகுந்த பரபரப்புக்கு பின் சில இடங்கள் தவிர்த்து உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் பத்மாவதி இல்லை பத்மாவத்.

தொடர்ந்து வரலாற்று படங்களாக எடுத்துவரும் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள இப்படத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோன் ஜோடி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. ஷாகித் கபூர் நாயகனாக நடித்துள்ளார்.

கதைக்கரு

மேவார் நாட்டின் ராஜ்புத் அரசன் ரத்தன் சிங் (ஷாகித் கபூர்) மனைவிக்காக முத்துக்கள் எடுக்க சிங்களம் சென்று அங்கு பத்மாவதியின் (தீபிகா படுகோன்) அழகில் மயங்கி அவரை இரண்டாவது திருமணம் செய்கிறார். அவரின் அந்தப்புரத்தை எட்டிப்பார்க்கும் ராஜகுருவை நாடுகடத்த அவர் இவர்களை பழிவாங்க காத்திருக்கிறார்.

மறுபுறம் டெல்லியில் பெண் மீது வேட்கை கொண்ட கொடூர தளபதியாக இருக்கும் அலாவுதின் கில்ஜி (ரன்வீர் சிங்) மங்கோலியர்கள் உட்பட மற்ற தேசங்களை வெற்றிகொண்டு சொந்த மாமாவான ஜலாலுதினை கொலை செய்து சுல்தானாகிறார். இவர் இன்னும் உலகம் முழுவதையும் கைப்பற்ற பேரழகியான பத்மாவதியை கரம்பிடிக்க வேண்டும் என்று ராஜகுரு ஆசையை தூண்டிவிடுகிறார்.

இதனால் அலாவுதினுக்கு பத்மாவதியை அடையவேண்டும் என்ற ஆசை தீயாக மாற சித்தூர் கோட்டையை நோக்கி போர் தொடுக்கிறார். கோட்டையின் சுவரை தாண்ட முடியாதபடி மதில் எழுப்ப அங்கேயே 6 மாதம் தங்கி முயற்சித்தும் பலனளிக்காததால் சமாதானமாக போவதாக நடித்து கோட்டைக்குள் நுழைகிறார். ஆனால் பத்மாவதியை அரை நிமிடம் கூட சரியாக பார்க்கமுடியாமல் போக தந்திரமாக ஏமாற்றி ரத்தன் சிங்கை கைது செய்து டெல்லிக்கு கொண்டுபோகிறார்.

இதன்பின் கணவனை அலாவுதினிடமிருந்து பத்மாவதி மீட்டாரா, அலாவுதின் ஆசை நிறைவேறியதா என்பது தான் இரண்டாம்பாதி.

நடிகர், நடிகைகள்

இந்த படத்தில் அனைவருமே அந்த கதாபாத்திரங்களாக வாழ்ந்துள்ளார்கள் என்றே தோன்றுகிறது. கடைசிவரை பார்க்காத பெண்ணை அடைய எந்த எல்லைக்கு சென்றாலும், தவறில்லை என கொடூர சுல்தானாக மிரட்டியுள்ளார் ரன்வீர் சிங். படம் முடிந்தாலும் அனைவர் மனதில் நிற்பது இவரின் நடிப்புதான்.

அழகான, வீரமான பத்மாவதியாக நடித்துள்ளார் தீபிகா படுகோன். புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கும் அரசியாகவும், உணர்வுகளை வெளிப்படுத்தும் பெண்ணாகவும் நடித்துள்ளார். இன்னும் வலுவான காட்சிகள் இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

மரணமே வந்தாலும் எந்த நிலையிலும் நேர்மையாக மட்டும்தான் சண்டைபோடுவேன் என ராஜபுத்ரனாக நடித்துள்ளார் ஷாகித் கபூர். ஆனாலும் இவரின் நடிப்பு பெரியளவில் ஜொலிக்கவில்லை.

சுல்தானின் அடிமையாக வரும் மாலிக் கபூர்(Jim Sarbh), சுல்தானின் மனைவியாக வரும் அதிதி ராவ், ரத்தன் சிங் தளபதியாக வரும் கதாபாத்திரம் என குறிப்பிடும்படியான பலர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ப்ளஸ்

போருக்கு தேவை நேர்மை இல்லை வெற்றி தான், அழகு என்பது என்ன? என வரும் பல வசனங்கள் கவனிக்கப்படும்படியாக உள்ளது.

படத்தில் அரண்மனை, கோட்டை, போர்க்களம், போன்ற பல செட்களை தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். ரன்வீர் சிங்கின் நடிப்பு

படத்தின் பாடல் மனதில் நிற்கவில்லை என்றாலும் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. கிராபிக்ஸ் காட்சிகள், டிசைன், ஒளிப்பதிவு என அனைத்தும் நன்றாகவே உள்ளது. எடிட்டர் இன்னும் பல காட்சிகளை குறைத்திருக்கலாம்.

மைனஸ்

படத்தின் வேகம் நம்மை வெகுவாக சோதிக்கும். ஒரு சில காட்சிகளை தவிர படத்தில் விறுவிறுப்பான காட்சிகள் என்பதே சொல்லும்படி இல்லை.

போர் காட்சிகளை இன்னும் சுவாரஸ்யமாக எடுத்திருக்கலாம். பிரமாண்ட படம் என்பதால் பாகுபலியை மனதில் நினைத்து செல்பவர்கள் நிச்சயம் ஏமாற்றமடைவார்கள். இந்த படத்துக்கு 3டி ஏன் என்று தெரியவில்லை.

பத்மாவதியை கடைசிவரை புனிதப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு எதற்கு இந்த தேவையில்லாத கலவரம் என்று கேள்வி எழும்புகிறது. அவர்கள் பார்த்தால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள்.

மொத்தத்தில் பரபரப்புடன் படம் பார்க்க வந்தவர்களின் விறுவிறுப்பை சோதித்தாலும் வித்தியாசமான அனுபவத்தை தருகிறார் பத்மாவதி.