பஞ்சாபில் பத்மாவதி வெளியிடத் தடை இல்லை: முதல்வர் கேப்டன் அம்ரீந்தர்சிங் அறிவிப்பு…


பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகீத்கபூர் நடித்துள்ள இந்தி படம் பத்மாவதி.

ராஜஸ்தான் மாநிலத்தின் மேவார் பகுதியை ஆண்ட ராணி பத்மினியின் வரலாற்றை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அலாவுதீன் கில்ஜி யாக நடித்துள்ள ரன்வீர் சிங்குக்கும், ராணி பத்மினியாக நடிக்கும் தீபிகாபடு கோனேவுக்கும் இடையே காதல் மலர்வது போல காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் பத்மாவதி படத்துக்கு பாஜக உள்ளிட்ட இந்துத்வா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ராஜபுத்ர வம்சத்தினரும் இந்த படத்தை வெளியிடக் கூடாது என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர். உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தன.
இதனால் ரூ.190 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வெளியாவது தள்ளி வைக்கப்பட்டது. கடந்த 1-ந்தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தது.

இந்த நிலையில் பத்மாவதி படத்துக்கு பஞ்சாப் மாநிலத்தில் தடை இல்லை. இந்த படத்தை அனுமதிப்போம் என்று மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர்சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அனைவரும் வியாபாரம் செய்ய வாய்ப்பளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் படத்தை தயாரிப்பவர்களுக்கும் பொறுப்புகள் இருக்கிறது. வரலாற்று படத்தை எடுக்கும் போது சரியான முறையில் இருக்க வேண்டும்.

பஞ்சாப் மாநிலத்திலும் பத்மாவதி படத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மிரட்டல் விடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பத்மாவதி படத்தை பஞ்சாப் அரசு அனுமதிக்கும். அதை தடுத்து நிறுத்த மாட்டோம். படத்தை வெளியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என அவர் கூறியுள்ளார்.