இம்ரான் கானை ஆட்சிக்குக் கொண்டு வரும் திட்டம் 2-3 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது என்று கூறும் இம்ரானின் முன்னாள் மனைவியும் பத்திரிகையாளருமான ரேஹம் கான், இம்ரானுக்கு பல சிக்கலான விஷயங்கள் புரியாது, ராணுவத்தின் சொல்படிதான் அவர் நடப்பார் என்று திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளார்.
தமிழக ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து:
கேள்வி: இம்ரான் கான் கட்சியான பிடிஐ-யின் வெற்றி குறித்து என்ன நினைக்கிறீர்கள்? குறிப்பாக 5 தொகுதிகளிலும் இம்ரான் வெற்றி குறித்து…
ரேஹம் கான்: முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று எனக்கு முன் கூட்டியே தெரியும். ஆனால் அதே சமயத்தில் தேர்தல்கள் முறையாக நடந்திருந்தால், நியாயமாக நடந்திருந்தால் இம்ரான் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.
பிடிஐ கட்சியைப் பற்றி அறிந்திராத கைபர் பதுன்க்வா பகுதியிலும் இம்ரான் கட்சி வெற்றி பெற்றது சாத்தியமேயில்லை. கராச்சி, லாகூர் போன்ற இடங்களில் கூட நல்ல அனுபவமிக்க பல வேட்பாளர்கள் ஊர்பேர் தெரியாத இம்ரான் கட்சி வேட்பாளர்களிடம் தோற்றுள்ளனர் இதைத்தான் நம்ப முடியவில்லை.
கேள்வி: நீங்கள் இம்ரானை ராணுவ வேட்பாளர் என்று கூறுகிறீர்கள், ஆனால் பாகிஸ்தானில் யார் வந்தாலும் ராணுவ ஆசீர்வாதங்களுடன் தானே வருகின்றனர்?
ரேஹம் கான்: நிச்சயமாக. 2013-ல் இம்ரான் கான், நவாஸ் ஷெரிப் குறித்துக் கூறும்போது அவரும் ஆட்சியதிகாரத்தின் ஆதரவில் வாழ்பவர் என்று கூறினார். எனவே இம்ரானுக்கும் இது தெரியும்.
இந்த் முறை ராணுவ அதிகாரம் தன் பவரைப் பயன்படுத்த திட்டமிட்டு இம்ரான் கானுக்கு ஆதரவு அளித்துள்ளது. நவாஸ் ஷெரீப் இந்தியா, சீனா கொள்கைகளில் தனித்து இயங்க முயன்றார்,
இது ராணுவத்துக்கு அதிருப்தி அளித்தது. இப்போது இம்ரான் மிகவும் பொருத்தமான ஒரு பொம்மை, ஒரு கைப்பாவை. சிக்கலான விஷயங்களில் அவருக்கு எந்த ஒரு அறிவும் கிடையாது, ராணுவத்தின் சொல்படிதான் அவர் நடந்தாக வேண்டும்.
கேள்வி: உங்கள் புத்தகத்தில் இம்ரான் கானை உருவாக்கியது ராணுவம் என்று கூறியிருந்தீர்கள், ஆனால் 2008-ல் ராணுவ ஆட்சியின் கீழ் தேர்தல்களை இம்ரான் புறக்கணித்துள்ளாரே?
ரேஹம் கான்: ஒரு மனைவியாக எனக்குத் தெரியும். எப்போதுமே ராணுவத்துடன் தனக்கு இருக்கும் தொடர்பை அவர் பேசிஉள்ளார். 2008-ல் தன்னை அவர்கள் ஆதரிக்கவில்லை என்ற ஏமாற்றத்தினால் தேர்தலைப் புறக்கணித்திருக்கலாம். ஆனால் எனக்கு அவரை நன்றாகத் தெரியும், எப்போதும் ராணுவம் தனக்கு ஆதரவு என்றே அவர் கூறிவந்தார். தான் பிரதமராவோம் என்று அவர் உறுதியாக நம்பினார், இதற்கான திட்டம் 2-3 ஆண்டுகளுக்கு முன்பே தீட்டப்பட்டு விட்டது.
இந்தியா பற்றி இம்ரான்…
ஆம் இந்தியாவில் இம்ரான் நிறைய காலம் இருந்திருக்கிறார், அங்கு அவருக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். இதனால்தான் அவர் பிரச்சாரத்தில் இந்தியா மீது விமர்சனங்களை வைத்திருக்கக் கூடாது என்று நான் கருதினேன்.
இந்தியாவுடன் அவர் ஆரோக்கியமான உறவுகள் வேண்டும் என்று நினைப்பதாக நாம் கற்பனை செய்து பார்த்தால் வர்த்தக உறவுகளுக்காக இருக்கும். ஆனாலும் இந்தியாவுடன் அதிக வர்த்தக உறவுகள் வேண்டும் என்று கருதும் ஷரீப்புகளை இம்ரான் கான் துரோகிகள் என்றல்லவா அழைத்தார்.
இந்தியாவுக்கு அதிக சாதக நாடு என்ற தகுதி வழங்குவதை நிறுத்தினார். அவருக்கு கொள்கையெல்லாம் ஒன்றும் கிடையாது. எனவேதான் கூறுகிறேன், அவரை என்ன செய்யச் சொல்கின்றனரோ அதைத்தான் அவர் செய்வார் என்று. இது இந்தியாவாக இருந்தாலும் பாகிஸ்தானாக இருந்தாலும் அவருக்கு சொல்லப்படுவதை மட்டும்தான் அவர் செய்வார்.
இவ்வாறு கூறியுள்ளார் ரேஹம் கான்