பாக்., பயணிகள் ரயிலில் தீ விபத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு…..

பாகிஸ்தானில் விரைவு ரயிலில் பயணிகள் சமைக்கப் பயன்படுத்திய கேஸ் சிலிண்டர்கள் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதில் 65 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து ராவல்பிந்தி நோக்கிச் சென்று கொண்டிருந்த தேஸ்கம் விரைவு ரயிலில் பயணிகள் சிலர் சமைப்பதற்காக பயன்படுத்தியதாக 2 கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியுள்ளன.

இதனால் ரயிலில் பற்றிய தீயானது மளமளவென பரவியதில், 3 பெட்டிகள் கொழுந்து விட்டு எரிந்தன.

இந்த கோர விபத்தில் தற்போது வரை 65 பேர் பலியாகியுள்ளதாகவும், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்டவுடன் உயிரைக் காத்துக் கொள்வதற்காக ஓடும் ரயிலிருந்து குதித்ததாலேயே பெரும்பாலான பயணிகள் உயிரிழக்கக் காரணம் என அந்நாட்டு ரயில்வேத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் நீண்ட தூர பயணங்களின் போது சமையல் செய்வதற்காக, பயணிகள் அடுப்புகளையும், கேஸ் சிலிண்டர்களையும் மறைத்து எடுத்துச் செல்வதே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.