பாகிஸ்தான் சுதந்திரத் தினத்திற்கு முன்பே பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான் கான்..


பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், முன்னிலையில் உள்ள இம்ரான் கானின் பாகிஸ்தானின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஆட்சி, கடந்த மே மாதம் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தானில் உள்ள 342 இடங்களில், 70 இடங்கள் பெண்கள், சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 272 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.

இந்த தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ-இன்சாப், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சி அதிகபட்சமாக 115 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இருப்பினும், ஆட்சியமைக்க 172 இடங்கள் வேண்டுமென்பதால், மற்ற கட்சிகளிடமும், சுயேட்சை வேட்பாளர்களுடனும் கூட்டணி அமைக்கப் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நயீம் உல் ஹக் கூறுகையில், ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு முன்பாக இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்பார் எனவும், சுயேச்சை வேட்பாளர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதால், இன்னும் ஒரு சில நாட்களில் நல்ல செய்தி வரும் எனவும் தெரிவித்துள்ளார்.