இந்தியாவை சேர்ந்த 49 வயதான குல்பூசன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைத்துள்ள சர்வதேச நீதிமன்றம், தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக நாசவேலைகளில் ஈடுபட உளவு பார்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில், இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஜன் ஜாதவ் கடந்த 2016 ஆம் ஆண்டு பலுசிஸ்தான் மாகாணத்தில் கைது செய்யப்பட்டார். 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
இதையடுத்து ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ரத்து செய்யக் கோரி, நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் செயல்பட்டு வரும் ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்தை இந்திய அரசு நாடியது. விசாரணைக்குப் பின் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இருதரப்பு வாதங்கள் முடிந்ததை அடுத்து தீர்ப்பை கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு வெளியிடப்பட்டது. குல்பூசன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பாகிஸ்தான் மறுஆய்வு செய்யும் வரை, தண்டனையை நிறுத்தி வைப்பதாக சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் குல்பூசன் ஜாதவுக்கு தூதரக உதவி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இதனால் ஜாதவை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது. எனினும் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரிக்க வேண்டும், விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட இந்திய அரசின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. சர்வதேச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இந்தியாவின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.