பழனி தைப்பூச திருவிழாவில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் வீடான திருஆவினன்குடி என்ற பழனி மலையில் முருகன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த பிரசித்தி பெற்ற பழனிமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவிற்காக ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் காவடி சுமந்து வந்து தங்களது நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தைப்பூசி திருவிழா விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் கோயில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
அதில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தைப்பூச திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பக்தர்கள் வசதிக்காக கட்டணமில்லா குளியலறை, கழிவறை வசதிகள், வரிசையில் நெடுநேரம் காத்திருப்பதை தவிர்க்க எட்டு டிக்கெட் கவுன்டர்கள் அமைக்கப்படவுள்ளன.