முக்கிய செய்திகள்

பழனியில் தைப்பூசத் திருவிழா : விண்ணை முட்டும் ‘அரோகரா’ கோஷம்….


பழனியில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து பழனிக்கு பாதயாத்திரையாக வந்துள்ளனர். இன்று மாலை சந்திரகிரகணம் என்பதால் 60 ஆண்டுகளில் முதல் முறையாக காலையில் தேரோட்டம் நடைபெறுகிறது.

தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவானது 7ம் நாளான இன்று தைப்பூசம் என்பதால் தேரோட்டமும் நடைபெறுகிறது. 25ம் தேதி முதலாகவே பழனிக்கு வரக்கூடிய பக்தர்கள் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமே இருந்தது.

தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான இன்று பல லட்சம் பக்தர்கள் பழனியில் திரண்டிருக்கிறார்கள். என்றாலும் கூட இன்று சந்திரகிரகணம் என்பதால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூட்டம் சற்று குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆயினும் கூட பழனியில் இருக்கக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை பல லட்சம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நேற்று மட்டுமே ஒரே நாளில் சுமார் 6 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்திருக்கிறார்கள். நேற்று சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றதால் அதிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றார்கள்.

இன்று விஷேச தினம் என்பதால் அதிகாலை 4 மணிக்கே தண்டாயுதபானி சுவாமியின் மூலவர் சன்னதியின் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து விஷ்வரூபம், விழா பூஜை, சிறுகால சந்தி என்ற 3 பூஜைகளும் முடிவடைந்திருக்கின்ற நிலையில் உச்சிக்கால பூஜையானது 12 மணிக்கு நடைபெற இருக்கிறது. வழக்கமாக சாயரச்சை பூஜையானது மாலை 5 மணிக்கு நடைபெறும்.

ஆனால் இன்று சந்திரகிரகணம் என்பதால் அந்த பூஜையும் இன்று மதியத்திற்கே நடத்தப்படுகிறது. இதன் காரணமாக பக்தர்களும் கூட நடை அடைக்கப்பட்டு பிற்பகலுக்கு பிறகு பக்தர்கள் தரிசனமும் நிறுத்தப்படுகிறது.

மலைமேல் வரக்கூடிய பக்தர்கள் 12 மணியுடன் நிறுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே போன்று கோவிலில் சாயரச்சை பூஜை முடிவடைந்ததற்கு பிறகு 2.45 மணிக்கு நடை அடைக்கப்படும். அதற்கு பிறகு சந்திரகிரகணம் முடிவடைந்ததற்கு பிறகு தான் 8.30 மணிக்கு தான் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

ஆனால் அப்பொழுது கூட பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே கோவிலில் மதியத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடிக்க வேண்டும் என நேற்று இரவே ஏராளமான பக்தர்கள் கோவிலில் வந்து தங்கியிருந்தார்கள். சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

மேலும் முக்கியமாக திருத்தேரோட்டமானது கோயிலின் அடிவாரத்தில் நடைபெற இருக்கிறது. வழக்கமாக தேரோட்டமானது தைப்பூச தினத்தில் மாலையில் நடைபெறும், ஆனால் இன்று சந்திரகிரகணம் என்பதால் காலையிலேயே நடைபெற உள்ளது.

காலை 10.30 மணிக்கு திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனியில் மட்டும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருக்கிறார்கள். குறிப்பாக காவடிகள் எடுத்தும், நடைபாதையாகவும் ஏராளமான பக்தர்கள் வந்திருக்கிறார்கள்.