முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமி வசம் உள்ள நெடுஞ்சாலை துறை சார்பில், ஒட்டன்சத்திரம் – தாராபுரம் – அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலை திட்டம் உருவாக்கப்பட்டது.
இதற்கு, ஆரம்ப கட்ட திட்ட மதிப்பீடு, 713.34 கோடி ரூபாய். பின், திட்ட மதிப்பீடு, 1,515 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.இப்பணிக்கான ஒப்பந்தம், ‘ராமலிங்கம் அண்டு கோ’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
இந்நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர், முதல்வரின் உறவினர். அதேபோல, திருநெல்வேலி – செங்கோட்டை – கொல்லம் நான்கு வழி சாலை திட்டம், ‘வெங்கடாசலபதி கன்ஸ்ட்ரக் ஷன்ஸ்’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
இதன் உரிமையாளர், முதல்வரின் சம்பந்தி. இவ்வாறு, 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளை வழங்கியதில், அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளதாக திமுக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரித்து வந்தனர். தமிழக அரசு வசம் உள்ள இந்த துறை விசாரித்தால் நியாயமாக இருக்காது என திமுக தரப்பில் சி.பி.ஐ., விசாரணை கோரப்பட்டது.
இதனை ஏற்ற சென்னை ஐகோர்ட் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது.