‘பள்ளிப்பருவத்திலே’ – திரைவிமர்சனம்..
பலவிதமான படங்கள் வித்தியாசமான கதைகளை தாங்கி எடுக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. அதில் சில உண்மை சம்பவங்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
அது அத்தனைக்கும் காதல் விசயத்தில் ஒரு ஒற்றுமையிருக்கும். ஆனாலும் மாறான விதத்தில் எளிமையான கதையாக ஒரு சில படம் வந்து போவது மக்களிடம் இடம் பிடித்துவிடும்.
அதை போல வெளிவந்துள்ள பள்ளிப்பருவத்திலே கடந்த கால காதலை நினைவுபடுத்துமா, மனதில் இடம் பிடிக்குமா என பார்ப்போம். பள்ளிப்படுவம் போகலாம்.
கதைக்கரு
தஞ்சை மாவட்ட கிராமத்தில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.எஸ்.ரவிக்குமார். இவரின் மனைவி ஊர்வசி மிகவும் வெகுளி. இவர்களுக்கு ஒரே ஒரு ஆண் பிள்ளை. அவர் தான் ஹீரோ நந்தன் ராம். படத்தில் இவரின் பெயர் கலை.
அப்பா வேலை பார்க்கும் பள்ளிகூடத்தில் தான் இவரும் படிக்கிறார். இவருக்கு நெருங்கிய நண்பர்களாக பொரி உருண்டை என்பவரும், இன்னொருவரும். போகும் இடமெல்லாம் மூவரும் ஒன்றாக தான் செல்வார்கள்.
தன் சகவகுப்பில் படிக்கும் கனி (வெண்பா) மீது கலைக்கு காதல். அதுவும் பள்ளிப்பருவ காதல். கனியின் அப்பா பொன்வண்ணன். ஊரில் செல்வாக்கான குடும்பம்.
இவரின் தம்பி ஆர்.கே,சுரேஷ் டான் போல கட்டபஞ்சாயத்து என செல்வார். பல வருடங்களாக இதே ஊரில் தலைமையாசிரியர் என்பதால் ரவிக்குமார் மீது ஊரார் எல்லாம் உறவினர்கள் போல நட்பாக இருக்கிறார்கள்.
ஒருபக்கம் கனியை கலை ஃபாலோவ் பண்ணிக்கொண்டே இருக்க விசயம் பொன்வண்ணனுக்கு போகிறது. பின் என்ன, பொறுமையாக கையாள்கிறார். ஆனால் காதல் தான் கண்ணை கட்டிவிடுமே.
கனி கனி என அலைய பகை பொறி பற்றுகிறது. ஊர் பஞ்சாயத்து கூடுகிறது. கனிக்கு அவசர அவசரமாக கல்யாண ஏற்பாடுகள் ஒருபக்கம். காதல் சோகத்தில் கலை மறுபக்கம்.
பின் கதை வேறுவிதமாய் நகர, இருகுடும்பத்திற்கும் மோதல் வெடிக்கிறது. மானம், மரியாதைக்காக கலையை ஆணவக்கொலை செய்ய கனி அப்பா, சித்தப்பா இருவரும் பிளான் போடுகிறார்கள்.
கனியும் கலையும் காதலில் ஜெயித்தார்களா, ஆணவ கொலை இங்கேயும் நடந்தேறுகிறதா? ஊர் என்னானது பள்ளிப்பருவ காதல் உண்மையானதா என்பதை சொல்லும் கதை தான் இந்த பள்ளிப்பருவ காதல்.
படம் பற்றி ஒரு பார்வை
ஹீரோ நந்தன் ராம் சினிமாவிற்கு புதிது. இது தான் அவரின் முதல் படம். இவரின் அப்பா பல படங்களில் தமிழ் சினிமாவில் பணியாற்றியவர். முதல் படம் என்றாலும் இந்த கதை அவருக்கு எளிமையானதாக அமைந்திருக்கும்.
ஸ்கேல் அளந்து நடித்திருக்கிறார். பள்ளிப்பருவத்திற்கான அதே பாவனை அப்படியே இயல்பாக நடித்திருக்கிறார். பையன்களுக்கு அப்பா என்றாலே ஒரு முறைப்பு இருக்குமே அந்த விசயம் இங்கேயும் தொடர்கிறது.
பல ஹிட் படங்களை கொடுத்த ரவிக்குமார் இப்போதெல்லாம் படங்களில் ஸ்பெஷல் கேரக்டர்களில் நடித்து வருகிறார். ஊர் பிள்ளைகளுக்கெல்லாம் அப்பா போல இருப்பவர் தன் பிள்ளைக்கு அப்பாவாக இருந்தாரா, தலைமையாசிரியராக இருந்தாரா என்பதை நீங்கள் படத்தில் சென்று பாருங்கள்.
ஆனால் செயற்கை தனம் இல்லாத நடிப்பு. கடைசியில் இவருக்காக ஊரே அழும். ஹீரோயின் வெண்பா அதிகம் பேசமாட்டார். கிளைமாக்சில் தான் வாய் திறப்பார். வயது வந்த கிராமத்து பெண்ணின் எதார்த்தம்.
படத்திற்காக காட்சியை இப்படி வைக்கலாம் என்பது போலில்லை. இப்படித்தான் நடந்திருக்கும் என காட்சிகள் பிரதிபலிக்கிறது. ஊர்வசி தன்னுடைய ரோலில் காமெடி புகுத்திவிடுவார் எப்போதும்.
ஒரு வெகுளியான அம்மாவாக குறும்பாக அவர் செய்யும் செயல், பேச்சு என படத்தின் சீரியஸ்க்கு நடுவிலும் சிரிப்பை வரவைக்கும். மகனை பெற்றவளாக அவர் படும் பாடு என்ன சொல்ல.
தம்பி ராமையா, கஞ்சா கருப்பு என காமெடிக்கு இருக்கிறார்கள். வழக்கம் போல கஞ்சா கருப்பை டம்மியாக்கும் காட்சிகளும் இதில் இடம் பிடிக்கின்றன். பிக்பாஸ்க்கு பிறகு நமீதா நமீதா என மீண்டும் இங்கே புகழ் பாடுவார்.
பொன் வண்ணன் ஒரு மகளை பெற்றவராக இருந்தாலும் ஊர்க்காக குணம் மாறும் நடைமுறையை அப்படியே காட்டுகிறார். படத்தின் கதையை சரியாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர்.
கிளாப்ஸ்
ஆணவ கொலை சம்பவத்தை சரியாக பிரதிபலித்தவிதம் எதார்த்தம்.
நந்தன், வெண்பா இருவரும் கதைக்கு போதுமான நடிப்பு. அலட்டல் இல்லை.
படத்திற்கு விஜய் நாராயணனின் போதுமான பின்னணி இசை. கேட்கும் படியான பாடல்கள்.
பல்பஸ்
படத்தின் மிக நீளம் என்பதால் எப்போது முடியும் என்ற ஃபீல் வருகிறது.
படம் எந்த சம்பவத்தை பிரதிபலிக்கிறது என்பதை பற்றி நேர்முகமான தகவல் இல்லை.
முடியப்போகும் போது கூட குத்து பாடல் தேவை தானா என சின்ன முகம் சுளிப்பு.
மொத்தத்தில் பள்ளிப்பருவம் பள்ளிப்பருவம் தான். ஆனால் சினிமாக்கு இப்போதிருக்கும் நிலையில் இப்படி ஒரு எளிமையான கதை எடுபடுமா என யோசிக்க வைக்கிறது..