ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் மாநிலத் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்காக 2 லட்சத்து 98 ஆயிரத்து 335 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.
அவை அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு, பெரும்பாலானவை ஏற்கப்பட்டன. மனுக்களை வாபஸ் பெற இன்று மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், அதன்பின்னர் வேட்பாளர்கள் இறுதி விவரம் வெளியாக உள்ளது.
இந்தப் பட்டியல் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்களில் ஒட்டப்படும்.
அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பா.ம.க., பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 11 கட்சிகளுக்கு அந்தந்த கட்சிகளின் சின்னங்கள் ஒதுக்கப்படும்.
இதன் பிறகு பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கும் அதன் பிறகு சுயேச்சை வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்படும். இதற்காக 120 சின்னங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானபின், ஓரிரு நாட்களில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்ட வாக்குப் பதிவு வரும் 27-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 30-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.
இதனிடையே, நகர்மன்றத் தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி கூடலூர் நகர்மன்ற தலைவர் பதவியிடம் பழங்குடியின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு 8 நகர்மன்ற தலைவர் பதவியிடங்களும், அந்த சமுதாயத்தை சேர்ந்த பெண்களுக்கு 9 நகர்மன்ற தலைவர் பதவியிடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 152 நகராட்சிகளில் 51 நகர்மன்ற தலைவர் பதவியிடங்கள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ளவை பொது பதவி இடங்களாகும்