நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது: பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை (ஜன.31) தொடங்குகிறது. முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தனது 2-ஆவது ஆட்சிக் காலத்தின் 2-ஆவது பட்ஜெட்டை சனிக்கிழமை தாக்கல் செய்கிறது.

நாடாளுமன்ற நாள் குறிப்பின்படி, 2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 மணியளவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

அவர் தாக்கல் செய்யும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும்.
நாட்டின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் நோக்கில் இந்த பட்ஜெட் தயாரிப்பில் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட ஆர்வம் காட்டியுள்ளார்.

இதற்காக தொழில்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினருடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதேபோல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பொருளாதார நிபுணர்கள், தொழில்துறைத் தலைவர்கள், விவசாயிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்.
பணவீக்கம், வேலையின்மை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு, குறைந்த வரி வருவாய் உள்ளிட்ட பிரச்னைகளால் இந்தியப் பொருளாதாரம் சரிவைச் சந்தித்துள்ள நிலையில்,

பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடவிருக்கும் அறிவிப்புகளுக்காக அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காலை 11.30 மணியளவில் கூட்டத்தொடரை தொடக்கி வைக்கிறார்.

அப்போது, அங்கு ஒன்றாகக் கூடியிருக்கும் நாடாளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்களிடையே அவர் உரையாற்றுகிறார்.

அதையடுத்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
 

இரு பகுதிகளாக…: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது இரு பகுதிகளாக நடைபெறவுள்ளது. முதல் பகுதி ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11-ஆம் தேதி வரையிலும், 2-ஆவது பகுதி மார்ச் 2 முதல் ஏப்ரல் 3-ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

இதனால், அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கும், அதன் முடிவில் அறிக்கையை தாக்கல் செய்வதற்கும் நாடாளுமன்ற நிலைக் குழுக்களுக்கு 19 நாள்கள் வரை அவகாசம் கிடைக்கிறது.

இந்தக் கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்கள் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க அரசு தயார்: பிரதமர் நரேந்திர மோடி
புது தில்லி, ஜன. 30: அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் விவாதிப்பதற்கு அரசு தயாராக உள்ளது என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை தொடங்குவதையொட்டி, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக அரங்கில் வியாழக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பின்னர் செய்தியாளர்களிடம் விவரித்தார். அவர் கூறியதாவது:
சர்வதேச பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மோடி திட்டமிட்டு வருகிறார்.

மேலும், நாட்டின் பொருளாதார பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் மோடி கூறியுள்ளார்.
இதுமட்டுமன்றி, அனைத்துப் பிரச்னைகளிலும் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் கருத்துகளைக் கேட்பதற்கும், அதுகுறித்து விவாதிப்பதற்கும் அரசு தயாராக இருப்பதாகவும் மோடி கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் அரசு பதிலளிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

அந்தச் சட்டம், நாடாளுமன்றத்தில் ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்பட்டதை எதிர்க்கட்சிகள் புரிந்துகொண்டு,

தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றார் பிரகலாத் சிங்.
 கூட்டத்துக்குப் பின்னர் குலாம் நபி ஆசாத் பேசியதாவது:
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்துகொள்ள ஏதுவாக,

வீட்டுக் காவலில் இருந்து அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுபவர்களைச் சந்தித்துப் பேசுவதற்கு அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

இதிலிருந்து அகந்தைப் போக்குடன் அரசு செயல்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றார் குலாம் நபி ஆசாத்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் குடியுரிமை திருத்தச் சட்டம், நாடு தழுவிய தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் சிவசேனை சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.
 அனைத்துக் கட்சிகளும் உறுதி:
அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, “நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறும் என்று நம்புகிறேன்.

ஒத்திவைப்பு நடவடிக்கைகள் இல்லாமல் கூட்டத்தை சுமுகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பதாக அனைத்துக் கட்சிகளும் உறுதியளித்துள்ளன.

அதேபோல், அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் அவர்களது கருத்துகளை தெரிவிப்பதற்காக போதிய நேரம் ஒதுக்கப்படும்’ என்றார்.