கட்சி பதிவு செய்யப்படவில்லை என்பதால் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
தலைமை தேர்தல் கமிஷன் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ந்தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அணியை அதிகாரப்பூர்வ அ.தி.மு.க.வாக அறிவித்து, அந்த அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது.
இதை எதிர்த்து டி.டி.வி.தினகரன் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை தற்போது டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் டி.டி.வி.தினகரன் இடைக்கால மனு ஒன்றை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில், தான் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டி, உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் விதத்தில் இரட்டை இலை சின்னம் வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை
தனக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்கும் படியும், தனது அணிக்கான பெயரை தான் குறிப்பிட்டுள்ள 3 பெயர்களில் இருந்து ஒன்றை அனுமதிக்கும்படியும் தேர்தல் கமிஷனுக்கு கோர்ட்டு உத்தரவிடக்கோரி இருந்தார்.
அவருடைய இந்த கோரிக்கையை டெல்லி ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டு, பிரஷர் குக்கர் சின்னத்தை டி.டி.வி. தினகரனுக்கு ஒதுக்கீடு செய்யும்படி தேர்தல் கமிஷனுக்கு கடந்த ஆண்டு மார்ச் 9-ந்தேதி உத்தரவிட்டது.
டெல்லி ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மதுசூதனன் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில்
டி.டி.வி.தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்க டெல்லி ஐகோர்ட்டு ஆணை பிறப்பித்தது தவறு என்று கூறி, அந்த உத்தரவுக்கு கடந்த ஆண்டு மார்ச் 28-ந்தேதி இடைக்கால தடை விதித்தது.
அத்துடன், சுப்ரீம் கோர்ட்டில் இந்த பிரச்சினை மீது அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் வரை பிரஷர் குக்கர் சின்னத்தை டி.டி.வி.தினகரன் தலைமையிலான அணி பயன்படுத்தக்கூடாது” என்றும் நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கட்சி பதிவு செய்யப்படாததால், டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.வுக்கு பொதுச்சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் இந்திய தேர்தல் ஆணையம் வாதம் செய்தது.
இதைத்தொடர்ந்து விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டது.