பட்னாவிஸ் அளித்த எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதங்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு…

மகாராஷ்டிராவில் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸை பதவி ஏற்பு செய்து வைத்த ஆளுநருக்கு எதிராக சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது

அதுமட்டுமல்லாமல் ஆளுநரிடம் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த எம்எல்ஏ ஆதரவு கடிதங்களை நாளை காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வதில் மோதல் வெடித்ததால், கூட்டணி உடைந்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கின.

3 கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதியாகி இன்று ஆட்சி அமைப்பதாக இருந்த சூழலில் யாரும் எதிர்பாராத நிலையில், என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் பதவியேற்றனர்.

ஆனால், சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் மூன்றும் சேர்ந்து பெரும்பான்மைக்குத் தேவையான 145 எம்எல்ஏக்களுக்கு அதிகமாக வைத்திருந்தும் அவர்களை ஆளுநர் கோஷியாரி ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. ஆனால், 105 எம்எல்ஏக்கள் மட்டுமே வைத்திருந்த பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார்.

ஆளுநர் கோஷியாரின் இந்தச் செயலுக்கு எதிராகவும், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா,என்சிபி, காங்கிரஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷன், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, மகாராஷ்டிரா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகல் ரோத்தகி, மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகினார்கள்.
சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல்,அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில், “விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தை தொந்தரவுசெய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம் மன்னிக்கவும்” என்றார். அதற்கு நீதிபதிகள் மூவரும், ” இதுபோன்ற சூழலில் நாங்கள் பணியாற்றுவது எங்கள் கடமை வாதத்தைத் தொடரலாம்” என்றனர்

கபில் சிபல் வாதிடுகையில், ” தேர்தலுக்கு முன் அமைந்த பாஜக-சிவசேனா கூட்டணி முறிந்துவிட்டது, அவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆதலால், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் அமைத்துள்ளார்கள். இந்த மூன்று கட்சிகளிடம் பெரும்பான்மைக்கான எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.

ஆனால், எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி மாநிலத்தில் நிலவிய குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூட்டாமல் நீக்கியுள்ளார்கள். இது மிகவும் வினோதமான செயல்.

அதுமட்டுமல்லாமல் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவி ஏற்றுள்ளார்கள். எந்த அடிப்படையில் இவர்கள் பதவி ஏற்றார்கள், எந்த ஆவணத்தை அடிப்படையாக வைத்து ஆளுநர் இவர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். ஆளுநரின் செயல்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது, ஒரு தலைப்பட்சமானது.
ஆதலால், மகாராஷ்டிராவில் சட்டப்பேரவையில் இன்றே பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். பாஜகவுக்கு பெரும்பான்மை இருந்து அவர்கள் நிரூபித்தால் அவர்கள் ஆட்சி அமைக்கட்டும்” என்று தெரிவித்தார்

மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், ” சரத் பவாரின் என்சிபி கட்சியில் 54 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் தற்போது அவரிடம் 41 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் அஜித் பவாரை சட்டப்பேரவைக் குழுத் தலைவராக நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்த கடிதமும் ஆளுநரிடம் அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

அப்போது கபில் சிபல் பேசுகையில், ” சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் நவம்பர் 30ம் தேதிவரை அவகாசம் அளித்துள்ளார்.

இவ்வளவு கால அவகாசம் அளிப்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும். 41 எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில், அவர்கள் ஆதரவு கடிதம் இல்லாத நிலையில் பட்னாவிஸை அரசு அமைக்க அழைத்ததே ஜனநாயகத்துக்குச் செய்த துரோகம். ஆதலால், தாமதிக்காமல் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்

மகாராஷ்டிரா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ” விடுமுறை நாளான இன்று இந்த வழக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் மனுவை ஒத்திவைக்க வேண்டும்” என வாதிட்டார்

அபிஷேக் சிங்வி வாதிடுகையில், ” 2018-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த இதேபோன்ற வழக்கில்கூட பெரும்பான்மை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது, வெளிப்படையாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது அதேபோல இங்கும் வெளிப்படையான வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்தார்

முகல் ரோத்தகி வாதிடுகையில் ” ஆளுநர் எந்தவிதமான சட்டவிதிகளையும் மீறவில்லை என்பதால், இன்று எந்த உத்தரவும் நீதிமன்றம் பிறப்பிக்க அவசியம் இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க எந்த தேதியையும் நீதிமன்றம் அறிவிக்கத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மகாராஷ்டிரா அரசு, மத்திய அரசு, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

அதுமட்டுமல்லாமல் ஆளுநரிடம் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் அளித்த எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதங்கள் ,

அது தொடர்பான ஆவணங்களையும், குடியரசுத்தலைவர் ஆட்சியை நீக்கக் கோரி ஆளுநர் பரிந்துரை கடிதத்தையும் நாளை காலை 10.30மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். நாளை உத்தரவு பிறப்பிக்கிறோம்.

என்று மத்திய அரசு வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு உத்தரவிட்டனர்.

ஆனால், இதற்கு 2 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று துஷார் மேத்தா கேட்டதற்கு நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.