பட்டா மாறுதலுக்கு புதிய நடைமுறை…

தமிழகம் முழுவதும் பட்டா மாறுதலுக்கு புதிய நடைமுறையை பின்பற்ற உள்ளதாக வருவாய்த்துறை அறிவித்துள்ள காரணத்தால் இனி பொதுமக்களின் நேரம் மிச்சமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம்தான் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்களின் பத்திரப்பதிவு நடைபெறுகிறது.

பொதுவாக இந்தப் பதிவு முடிந்தவுடன் பட்டா பெயர் மாற்றுவதற்கான தனியான ஒரு படிவத்தை வருவாய்த் துறைக்கு அனுப்ப வேண்டும்.

அவர்கள் தரும் ஒப்புகைச் சீட்டை வைத்துக் கொண்டு தாலுகா அலுவலகத்தை அணுகி அதன் பின்னர் பட்டா பெயர் மாற்றம் செய்து தரப்படும். ஆனால் நடைமுறையில் அது விரைவாக நடைபெறுவது இல்லை.

பெயர் மாற்றம் உடனடியாக நடைபெறாமல் சர்வே எண் சரி பார்க்க வேண்டும், மூல ஆவணத்தை பார்க்க வேண்டும் எனக்கூறி பல்வேறு விதமான அலைக்கழிப்புகளுக்கு பின்னரே கிடைப்பதாக பொதுமக்களிடையே புகார் உள்ளது. பல்வேறு காரணங்களை கூறி பட்டா மாறுதல் செய்து தராமல் தாலுகா அலுவலகத்திலும் இழுத்தடிப்பு நடைபெறுவதாக புகார் எழுந்து வந்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பட்டா மாறுதலுக்கு புதிய நடைமுறையை பின்பற்ற உள்ளதாக வருவாய்த்துறை அறிவித்துள்ள காரணத்தால் இனி பொதுமக்களின் நேரம் மிச்சமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இனி வருங்காலங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து ஒரே சர்வே எண்களில் சொத்துகள் இருந்தால்,

பத்திரம் பதிவு செய்தவுடன் தானாகவே பட்டா மாறுதல் செய்யப்பட்டு விடும் எனவும் பொறுப்பில் உள்ள சார்பதிவாளர்கள் குறிப்பிட்ட சொத்தை பதிவு செய்தவர்கள் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா,

அந்த சொத்துக்களில் வேறு ஏதும் வில்லங்கங்கள் இருக்கிறதா, முழு அதிகாரம் அந்த சொத்தில் அவருக்கு உள்ளதா, அவர் மீது வேறு சொத்து உள்ளதா, அதற்கான பட்டா இருக்கிறதா என்பது தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.