அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களை உளவு பார்ப்பதற்காக மோடி அரசு பெகாசஸ் மென்பொருளை வாங்கியுள்ளது. நாட்டின் ஜனநாயக அமைப்புகளான அரசாங்க அதிகாரிகள், எதிர்கட்சித் தலைவர்கள் நீதித்துறை என அனைவரின் தொலைபேசிகளும் குறிவைத்து ஒட்டுக்கேட்டது தேசத்துரோகச் செயல் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா கடந்த 2017-ம் ஆண்டு பெகாசஸ் மென்பொருளை வாங்கியதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் விசாரணையில் இறங்கியுள்ளன.
இதற்கிடையே பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, 8 வாரங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் பிரபல அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ், பெகாசஸை உலக நாடுகள் வாங்கியது குறித்தும், அந்தநாடுகள் அவற்றை எப்படி பயன்படுத்தியது என்பது குறித்து விரிவான புலனாய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது.
அக்கட்டுரையில், 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா கடந்த 2017-ம் ஆண்டு பெகாசஸ் மென்பொருளை வாங்கியதாக கூறியுள்ளது. இது இந்திய அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் மோடி அரசு தேசத்துரோகம் செய்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பகுதியில் ‘‘நமது ஜனநாயகத்தின் முதன்மையான நிறுவனங்கள், தலைவர்கள் மற்றும் பொதுமக்களை உளவு பார்ப்பதற்காக மோடி அரசாங்கம் பெகாசஸை வாங்கியது. போன்களை ஒட்டுக்கேட்டதன் மூலம் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, ராணுவம், நீதித்துறை உள்ளிட்ட அனைவரையும் குறி வைத்துள்ளனர். இது தேசத்துரோகம். இதன்மூலம் மோடி அரசு தேசத்துரோகம் செய்துள்ளது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மல்லிகார்ஜுன் கார்கே, ‘‘மோடி அரசு ஏன் இந்தியாவின் எதிரிகள் போல் செயல்பட்டு இந்திய குடிமக்களுக்கு எதிராக போர் ஆயுதத்தை பயன்படுத்தியது?. பெகாசஸைப் சட்டவிரோதமாக பயன்படுத்தியிருப்பது தேசத்துரோகச் செயலாகும். யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல, நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.