பெப்சி நிறுவனத் தலைவர் (CEO) பதவியில் இருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இந்திரா நூயி விலகுகிறார். 12 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருந்த 62 வயதான இந்திரா நூயி வரும் அக்டோபர் 3ஆம் தேதி இந்தப் பதவியில் இருந்து விலகுவார் என பெப்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவருக்கு பதிலாக ரமோன் லகுவார்த்தா (54) (Ramon Laguarta) பெப்சி நிறுவனத்தின் சிஇஓ வாக பதவியேற்கிறார். கடந்த 24 ஆண்டுகளாக பெப்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் இந்திரா நூயி, 12 ஆண்டுகளாக சிஇஓவாக பதவி வகித்து வந்தார். பெப்சி நிறுவன இயக்குநர்கள் கூட்டத்தில், ரெமோன் லகுவார்த்தா ஒருமனதாக சிஇஓவாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, இந்திரா நூயி அந்தப் பதவியில் இருந்து விலகுகிறார். எனினும் 2019ஆம் ஆண்டு முழுமையான பொறுப்புகளை ஒப்படைக்கும் வரை அவர் தலைவர் பதவியில் நீடிப்பார் எனவும் பெப்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெப்சி தலைவர் பதவியில் இருந்து தாம் விலகுவது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திரா நூயி, ரமோன் லகுவார்த்தா இந்தப் பதவிக்கு முழுமையான தகுதி உள்ளவர் என்றும், அவரது தலைமையில் வருங்காலத்தில் நிறுவனம் புதிய உயரங்களை தொடும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். 24 ஆண்டுகாலம் பெப்சி நிறுவனத்துடன் இரண்டறக் கலந்திருந்ததாகவும், தற்போதைய இந்தத் தருணம் பல்வேறு உணர்வலைகளைத் தம்முள் எழுப்புவதாகவும் இந்திரா நூயி தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பெப்சி நிறுவனம் மென்மேலும் சிறந்த நிலைக்கு வரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொல்கத்தா ஐஐஎம்மில் உயர்கல்வி படித்த இந்திரா நூயி, அமெரிக்காவின் ஏல் பல்கலைக் கழகத்தில் மேல்படிப்பை முடித்தார். பெப்சி நிறுவத்தில் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இணைந்தார்.
https://twitter.com/IndraNooyi/status/1026431769300672514
https://twitter.com/IndraNooyi/status/1026431767971094528
https://twitter.com/IndraNooyi/status/1026431761448873984
PepsiCo CEO Indra Nooyi to step down after 12 years