“பிரசவத்துக்கு முன்பும் கூட ஆய்வு பணி” : கொரோனா கண்டறியும் கருவி கண்டுபிடித்த இந்தியப் பெண் …

பிரசவத்துக்கு முன்பும் கூட ஆய்வு பணியில் மேற்கொண்டு கொரோனா கண்டறியும் கருவியை மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த வைராலஜி நிபுணர் மினல் தகாவே போஸ்லே கண்டுபிடித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. கொரோனா பரவல் இரண்டாம் கட்டத்தில் இருந்து மூன்றாம் கட்டத்தை நகர்ந்துக்கொண்டிருப்பதாக மருத்துவத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பைக் கண்டறியும் பணியில் சுகாதாரத்துறை பணியாளர்கள் இறங்கியுள்ளனர். ஆனாலும் இந்தியாவில் தற்போதுவரை குறைந்த அளவிலான மருத்துவச்சோதனையே நடைபெற்றுள்ளது.

அதற்குகாரணம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறியும் கருவிகள் போதியளவில் இல்லை. தற்போது வரை கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறியும் கருவிகளை ஜெர்மன் நாட்டில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகின்றது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறியும் கருவிகள் அடங்கிய கிட் ஒன்றை இந்தியாவைச் சேர்ந்த ‘Mylab Discovery’ என்ற தனியார் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. புனே நகரை தலைமையிடமாக கொண்ட ‘Mylab Discovery’ நிறுவனத்தின் ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையின் தலைவர் மினல் தகாவே போஸ்லேதான் இத்தைய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

எட்டுமாதக் குழந்தையை கருவில் வைத்துக்கொண்டு நாட்டின் சூழலில் தனது மகப்பேறு ஓய்வு முக்கியமல்ல என எண்ணிய மினல் தகாவே, வெறும் நான்கு வாரத்தில் 3 மணிநேரத்தில் கண்டுபிடிக்ககூடிய பரிசோதனை கருவிகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் அவர் உருவாக்கிய கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறியும் கருவிகள் அதிக அளவில் தயாரிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மற்றொரு ஆச்சரிய விசயம் என்னவென்றால், பிரசவத்துக்கு முன்னர் சில மணிநேரத்திற்கு முன்பாக கூட தனது பணியை மினல் தகாவே செய்துள்ளார். தற்போது அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது. மேலும் அவரின் முயற்சிக்கு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.