தந்தை பெரியாரின் நினைவு நாளை ஒட்டி எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை…
1927 ம் ஆண்டு.
பெங்களூருவுக்கு ஓய்வுக்காக வந்து தங்கியிருந்த காந்தியை பெரியார் சந்திக்கிறா்.
அப்போது நடைபெற்ற நீண்ட விவாதத்திற்குப் பின்னர் பெரியாரிடம் காந்தி கேட்கிறார்.
“உங்கள் கருத்து என்ன, இந்து மதம் ஒழிய வேண்டும், பிராமணர்கள் ஒழிய வேண்டும் என்பதாக நான் கருதலாமா?”
அதற்கு, “இந்து மதம். அதாவது இல்லாத – பொய்யான – இந்த மதம் ஒழிந்தால் பிராமணர்கள் இருக்க மாட்டார்கள். இந்து மதம் இருப்பதால் பிராமணர்கள் இருக்கிறார்கள். நானும் தாங்களும் சூத்திரர்களாக இருக்கிறோம். எல்லாவித ஆதிக்கமும் பிராமணர்கள் கையில் இருக்கிறது என்கிறேன்” என்று பதில் சொல்கிறார் பெரியார்.
ஏறத்தாழ பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் நடத்திய இயக்கத்தின் வேலைத்திட்டம் குறித்த எளிய விளக்கமாகவோ, பிரகடனமாகவோ இதனைக் கொள்ளலாம்.
பிராமண எதிர்ப்பு என்ற புள்ளியில் இருந்து தொடங்கிய அவரது இந்தக் கலகப் பயணம், மெல்ல மெல்ல மொழி, இனம், சமூகநீதி என ராஜபாட்டையாக விரிவடைகிறது.
பெரியார் சர்வதேச அரசியல் தத்துவங்கள் எதனையும் படித்து, தன்னைத் தகவமைத்துக் கொண்டவரல்ல.
உலகில் எங்குமே காணமுடியாத சாதி என்ற சமூகப் படிநிலைச் சிடுக்குகள், அவரை இயல்பாகவே பாதிக்கின்றன.
அவருள் எழுந்த கேள்விகள் அனைத்தும் இந்தச் சமூகத்தின் இறுக்கமான அமைப்போடு அவரை முட்டி மோத வைக்கின்றன.
இடஒதுக்கீடை ஏற்க காங்கிரசும், ராஜாஜியும் மறுத்த போது, இங்கு வேரோடியிருக்கும் சனாதனத்தின் இறுக்கமும், ஆழமும் அவருக்குப் புரிகிறது.
கடவுளும், பிராமணீயமும் சனாதனத்தைக் காக்கும் மிகப் பெரிய காரணிகளாகச் செயல்படும் உண்மையை, நீண்ட அரசியல் பயணத்திற்குப் பின் அவர் கண்டைகிறார்.
அதனைத் தகர்த்தெறிய, மேலோட்டமான அரசியல் இயக்கம் பயன்தராது என்பதை உணர்கிறார். அறிவுக்கிளர்ச்சியைத் தமது ஆயுதமாகக் கையிலெடுக்கிறார்.
பரப்புரை என்பது மிகப்பெரிய அரசியல் கருவியாக மாறிய வேதிவினை தமிழகத்தில் அப்போதுதான் நிகழ்ந்தது.
பிரச்சார உத்தி என்பது எல்லா அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் பயன்படுத்திய பழைய நடைமுறைதான்.
எனினும், எளியமக்கள் நம்பும் கடவுளையும், மதத்தையும் விமர்சிக்க அதனைப் பயன்படுத்திய போது, அந்த வடிவத்துக்கு அறிவார்ந்த அடுத்தகட்டப் பரிணாமம் ஒன்று வாய்த்தது.
எதிர்மறை அரசியலை எந்தத் தயக்கமும் இன்றி முன்னெடுத்த பெரியாரைப் பின்பற்றி மிகப்பெரிய இளைஞர் படை அணி வகுத்தது. எழுத்தும், பேச்சும் வாளும், கேடயமும் போல அவர்களுக்குப் பயன்பட்டது.
இவை அனைத்துமே பெரியார் என்ற தத்துவ ஆளுமையின் புறச்சாயல்கள் மட்டுமே.
இவற்றையெல்லாம் தாண்டி இறுக்கமான சாதியச் சமூகத்தின் அடுக்குகளுக்குள் ஊடுருவி அவர் ஏற்படுத்திய அதிர்வுகள் முக்கியமானவை.
அதாவது,
கடவுளை எதிர்த்தார்.
மதத்தை எதிர்த்தார்.
பிராமணர்களை எதிர்த்தார்.
சாதிகளை ஒழிக்கச்சொன்னார்.
எனப் பொதுப்புத்தி சார்ந்து அவர் குறித்து படிந்துள்ள மேலோட்டமான படிமம், ஒரு வகையில் அவரது ஆளுமை சார்ந்த முழுமையான பரிமாணங்களை இந்தத் தலைமுறையினர் புரிந்து கொள்ளத் தடையாக இருக்கிறது என்றே சொல்லலாம்.
“பெரியாரா …. கடவுள் இல்லைனு சொல்லுவாரும்பாங்களே … அவருதானே…”
இன்றைய பெரும்பான்மையான இளைஞர்களுக்கு பெரியார் இவ்வளவுதான்.
இது எத்தனை பெரிய கொடுமை.
சமகாலத்தின் மறுதலிப்பிலிருந்து தத்துவார்த்த ரீதியாகக் கிளர்ந்தெழும் ஒரு தலைவன் எப்படி, எளிமையான ஒற்றைப் பரிமாண ஆளுமையாக மட்டுமே இருந்துவிட முடியும்.
நிச்சயமாகச் சாத்தியமில்லை.
பெரியார் முன்னெடுத்த அனைத்துப் போராட்டங்களுமே, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அடையாளத்துக்கானதும், உரிமைக்கானதுமான அழுத்தமான அரசியல் போராட்டங்கள் ஆகும்.
குறிப்பாக ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்.
அதுவெறும் மொழிக்கு எதிரான போராட்டம் அன்று.
ஓர் இனத்தின் அடையாளம், பண்பாடு, உரிமை இவை அனைத்தையும் காப்பதற்கான பெருங்கிளர்ச்சியாகவே அது நடந்தேறியது.
தொடர்ச்சியாக அதனை உள்வாங்கி, தமிழகத்தில் பரிணமித்த திராவிட இயக்க அரசியலின் வழியாக, நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புக்குள் ஊடுருவிச் சில உரிமைகளை வென்றெடுப்பதும் சாத்தியமாயிற்று.
அதே நேரத்தில், இலங்கையில் தந்தை செல்வா தலைமையில், ஜனநாயக ரீதியாகத் தொடங்கிய தமிழர்களின் உரிமைக்கான போராட்டம், காலப்போக்கில் அரசியல் ஊள்ளீடுகளை இழந்த ஆயுதப் போராட்டமாகத் திசை மாறியதையும் பார்த்தோம்.
தமிழகத்தில், பெரியாரின் தலைமையில் தொடங்கிய உரிமைப் போராட்டம், தமிழர்களை இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல் சக்திகளாக இன்று மாற்றியிருப்பதையும் பார்க்கிறோம்.
சில பின்னடைவுகளும், சமரசங்களும் இடையே நேர்ந்திருக்கலாம்.
எனினும், நிலவும் அரசியலமைப்பைக் கையாளவும், அதனுள் ஊடுருவி வென்றெடுப்பதற்குமான அரசியல் லாவகமும் இல்லாத எந்த ஓர் இயக்கமும், களத்திலும் நிற்க முடிவதில்லை. காலத்தாலும் அங்கீகரிக்கப்படுவதில்லை.
அந்த வகையில் பெரியார் வழி வந்த திராவிட இயக்கம் தன்னைக் காலத்திற்கேற்ப தகவமைத்து, நிலை நிறுத்திக் கொண்டது என்ற உண்மையை நாம் மறுத்துவிட முடியாது.
அத்தகைய அரசியல் திராணி திராவிட இயக்கத்துக்கு மட்டும் எங்கிருந்து கிடைத்தது என்பது முக்கியமான கேள்வி.
தமிழ்த் தேசியம் என்ற சொல்லாடலே புழக்கத்துக்கு வராத அந்தக் காலக்கட்டத்தில், இந்திய தேசியம் என்பது கற்பிதமானது என்று குரல் எழுப்பியவர் பெரியார். அவரது அந்தக் குரல்தான் திராவிட இயக்கத்தை, தேசிய இனப் போராட்டத்துக்கான இயக்கமாக தமிழர்கள் மத்தியில் வேரூன்றச் செய்தது.
“பெரியார் சொன்ன திராவிடம் இப்போது எங்கே இருக்கிறது… மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் திராவிடம் என்ற சொல்லும் பெயரும் பொருளிழந்து போய்விட்டன” என்பது பலரது விமர்சனம்.
பெரியாரின் தேசிய இனம் சார்ந்த பார்வை பற்றிய இந்தக் குழப்பத்தைத் தெளிவு படுத்திக் கொள்ள, மார்க்சிஸ்டாக இருந்து பின்னாளில் தமிழ்த்தேசியவாதியாக தன்னை அறிவித்துக் கொண்ட முதுபெரும் கவிஞர் தணிகைச் செல்வன், தனது “தேசியமும், மார்க்சியமும்” என்ற நூலில் எழுதியிருக்கும் வரிகள் உதவும் என்று நம்புகிறேன்.
இதோ அவருடைய நூலில் இடம் பெற்றிருக்கும் பகுதி…..
“மரபினத்தால் திராவிடர், மொழிக்குலத்தால் திராவிடர் என்ற இருகருத்துகளையும் பெரியார் ஏற்றுக்கொண்டார்.
ஆரியர்கள் என்றால் வடமொழிக்காரர்கள், வடக்கர்கள், வந்தேறிகள் என்று பொருள்படுவதால், அவர்தம் நேரடி எதிர்க்கலாச்சார மக்கள் என்பதை நிறுவத் திராவிடர் என்ற மரபினப் பெயரே பொருத்தமானது எனப் பெரியார் கருதினார்.
தமிழர் என்பதன் சமஸ்கிருதத் திரிபே திராவிடர் என்ற கருத்து, திராவிடர் என்ற பெயரைப் பெரியார் ஏற்படுத்துவதைத் தடுக்க வில்லை. அதன் வடமொழித் தன்மையைத் தாண்டி, வரலாற்றுத் தொன்மையே அவரை அதிகம் கவர்ந்தது.
ஆனால் நாடு என்ற கருத்தியலில் அவரிடம் சில தடுமாற்றங்கள் இருந்தன.
தென் இந்தியாவே திராவிட நாடு
சென்னை மாகாணமே திராவிட நாடு
தமிழ்நாடே திராவிட நாடு
போன்ற மாற்றங்களின் இயங்கியல், இயல்பாகவே தமிழ்நாடே தமிழர் நாடு என்ற கருத்து நிலையில் சென்று முடிந்தது. எனவே தமிழ்நாடு தமிழருக்கே என்ற கோரிக்கையில் தத்துவத் தடுமாற்றம் ஏதும் அவருக்கு ஏற்படவில்லை.
……………………………
தேசியம் என்றாலே அது இந்தியத் தேசியம் தான் எனக் கருதியவர் பெரியார். தேசியத்துக்கான மார்க்சிய இலக்கணம் பற்றி கம்யூனிஸ்ட் கட்சியுடன் மேற்கொண்ட விவாதத்தின் போது கூட, திராவிட நாடு என்று அவர் முன்னிறுத்தியது தமிழ்நாட்டின் தேசியத் தகுதியைத்தான்.”
கவிஞர் தணிகைச் செல்வனின் இந்த விளக்கம், பெரியாரின் அரசியல் பார்வை, எதிர்காலத்தில் எழும் கேள்விகளையும் எதிர்கொள்ளும் கூர்மையுடன் இருந்திருப்பதை நமக்கு உணர்த்துகிறது.
இவை எல்லாவற்றையும் விட காலம் முழுவதும் அவர் எதிர்த்து வந்த சாதி அமைப்பு, இன்றைக்குப் பெரும் மூர்க்கமும், உன்மத்தமும் கொண்ட விலங்காக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அந்த வகையில் திராவிட இயக்கம் தனது முக்கியமானதொரு வேலைத்திட்டத்தில் தோற்றுவிட்டதாகவே கருத வேண்டி இருக்கிறது.
எனினும் சாதிக்கு எதிரான தவிர்க்க முடியாத பொதுவான குறியீடாக பெரியார் இன்றுவரை இருந்து வருவதை மறுப்பதற்கில்லை.
பெண்கள் குறித்து அவர் கூறியுள்ள கருத்துகள் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் கூட நமது சமூகத்தைப் பொறுத்தவரை புதுமையானதும், புரட்சியானதும்தான்.
பொதுவாகவே பெரியார் மறைந்து 40 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட அவர் சொன்ன கருத்துகள், இன்றும் வெகுசன புத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துபவையாகவே உள்ளன.
இத்தகைய நவீனத்துவம் தான், பெரியாரை இன்றளவும் தேவையானவராகக் கருதவைக்கின்றன. நிறுவனங்களைக் கடந்து தனி நபர்களால், தத்துவார்த்த ரீதியாகப் பின்பற்றப்படும் தனிப்பெருந் தலைவராக, அவர் நிலைபெற்றிருப்பதற்கும் அவரது இந்தக் கருத்தியல் நவீனமே காரணமாகும்.
நவீனம்தான் பெரியார். பெரியார் என்றாலே நவீனம்தான்.
மேனா. உலகநாதன்
Periyar – A unavoidable needest personality of ideology