பெரியார் பேருந்து நிலையம் மூடல் : தற்காலிகமாக பேருந்துகளை நிறுத்த 9 இடங்கள் தேர்வு..

மதுரை பெரியார் பேருந்து நிலையம் மூடப்படுவதை அடுத்து, இன்று முதல் 9 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிறுத்தங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மதுரையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

பெரியார் பேருந்து நிலையம், காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் ஆகியவற்றை இணைத்து 156 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமையவிருக்கிறது.

இந்த பணிகளுக்காக பெரியார் பேருந்து நிலையம் இன்று முதல் மூடப்படுகிறது.

எனவே, மாற்று இடங்களில் பேருந்துகளை நிறுத்த போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. அதற்காக 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, திருப்பரங்குன்றம், திருமங்கலம் செல்லும் பேருந்துகள் டி.பி.கே. சாலையில் கே.பி.எஸ். ஓட்டல் அருகே நிறுத்தப்படும்.

தெப்பக்குளம், திருப்புவனம் ஆகிய இடங்களுக்கு டி.பி.கே. சாலை குற்றப்பிரிவு அலுவலகம் அருகில் இருந்து பேருந்துகள் புறப்படும்

சிந்தாமணி, வேலம்மாள் மருத்துவமனை வழியாக செல்லக்கூடிய பஸ்கள் டி.பி.கே. சாலையின் மத்தியில் நிறுத்தப்படும்

அவனியாபுரம், காரியாபட்டி மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து புறப்படும்

அழகர்கோவில், ஊமச்சிகுளம் வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் கோட்டை மற்றும் திண்டுக்கல் ரோடு பகுதியில் நிறுத்தப்படும்

மேலூர் செல்லும் பேருந்துகள் பாண்டி பஜார் சர்ச், ரெயில் நிலையம், மேலவெளிவீதி பகுதிகளில் இருந்து புறப்பட்டுச் செல்லும்

பாத்திமா கல்லூரி வழியாகச் செல்லும் பேருந்துகள் மகபூப்பாளையம், ரெயில் நிலைய மேற்கு நுழைவாயிலில் நிறுத்தப்பட்டிருக்கும்

உசிலம்பட்டி மார்க்க பேருந்துகள் எல்லீஸ் நகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் வாகன காப்பகம் அருகில் இருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாட்டுத்தாவணி, அண்ணா மற்றும் ஆரப்பாளையம் ஆகிய பேருந்து நிலையங்களுக்கு பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் அருகில் இருந்தும், பைபாஸ் சாலையில் இருந்து பேருந்துகள் புறப்படும்.

48 ஆண்டுகளாக மதுரையின் முக்கிய அங்கமாக, அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிப் போன பெரியார் பேருந்து நிலையம் விடைபெற்றுவிட்டது.

இரண்டாண்டுகளில் புதுப் பொலிவோடு பேருந்து நிலையம் உருவாகப் போவது மகிழ்ச்சி அளித்தாலும்,

பல ஆண்டுகளாக பார்த்துப் பார்த்துப் பழகிப் போன பேருந்து நிலையத்தை தற்போதைய வடிவில் இனி காண முடியாது என்பதால்,

எதிர்காலத்தில் அதன் நினைவலைகளை மட்டுமே சுமந்திருப்பார்கள் மதுரைவாசிகள்!