பெரியார், அண்ணா தலைப்பில் பேச்சுப் போட்டி: பரிசு 1 லட்சம் & தங்கப் பதக்கம் : மாணவர்களுக்கு வைகோ அழைப்பு….


தமிழர்களின் மான உணர்ச்சியைத் தட்டி எழுப்பிய தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் வரலாறை இளைய தலைமுறையினர் கற்று உணர வேண்டியது இன்றைய தேவை என கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

இந்திய விடுதலை எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு சமூக விடுதலை அதிமுக்கியம் என்பதை, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பறைசாற்றியது திராவிட இயக்கம்.

ஆதிக்க உணர்ச்சி மேலோங்கிய காலத்தில், அன்னைத் தமிழ் மொழிக்கு ஊறு விளைந்த நாட்களில் மூரி முழங்கி முந்திக் குரல் கொடுத்தது திராவிட இயக்கம்.

மானமும், அறிவும் மனிதனுக்குத் தேவை; மனிதர்களுள் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதம் கூடாது; குலக் கல்வி திட்டம் கூடாது; கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு என்பது அனைவருக்கும் கிட்ட வேண்டும்; சாதி மறுப்புத் திருமணங்கள் நடந்திட வேண்டும் என்று வாழ் நாள் முழுவதும் பேசிப் பேசி புரட்சி செய்தவர் தந்தை பெரியார்.

ஏற்றத் தாழ்வுகள் அற்ற சமுதாயம் மலர்ந்திட, நம்மை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில், 1967-ம் ஆண்டு மலர்ந்த திமுக ஆட்சி நமக்கான மாட்சியை ஏற்படுத்தியது. ஏழை, எளியவர்களின் அரசு என்பதை நிலை நாட்டியது. தரணி வாழ் தமிழர் பெரு மகிழ்வு கொள்ளும் வகையில், சென்னை மாநிலம் தமிழ்நாடு என்னும் பெயர் தாங்கி பீடு நடை போடுகின்றது. சுய மரியாதைத் திருமணம் சட்ட வடிவம் பெற்று இருக்கின்றது.

ஆனால் இன்றைக்கு, ஒரே நாடு, ஒரே சட்டம், இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு என வடவர் ஆதிக்கம் வலுப்பெற்று வருகின்றது; சமூக நீதியைக் கொன்று புதைத்திடும் வகையில் நீட் திணிப்பு ; பெரியார், அண்ணா இலட்சியங்களை அழித்திடும் ஆதிக்க உணர்வோடு பேசுவதும், தந்தை பெரியார் சிலையை அப்புறப்படுத்திட முனையும் ஆபத்து நடந்தேறும் சூழலில், இந்தப் பேராபத்துகளைத் தடுத்திடும் தார்மீகப் பொறுப்பு, அடர்த்தியான கொள்கைப் பற்றுடன் இயங்கி வரும் மறுமலர்ச்சி தி.மு. கழகத்திற்கு உண்டு.

திராவிட இயக்கம் எதைச் சாதித்து விட்டது? திராவிட இயக்கத்தின் தேவை இனி எதற்கு? என பத்தாம் பசலித்தனமாகப் பேசுகின்றவர்களுக்கு முன்னால், இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு திராவிட இயக்கத்தின் தேவை இருக்கின்றது என்பதை மாணவர்கள் மனதில் விதைக்க வேண்டும்.

திராவிட இயக்கத்தைத் தமிழ் மண்ணில் தோற்றுவித்து, தமிழர்களின் மான உணர்ச்சியைத் தட்டி எழுப்பிய தந்தை பெரியார், அவர்தம் கொள்கை நெறியைச் சட்ட வடிவம் ஆக்கிய அறிஞர் அண்ணா ஆகியோரின் வரலாறை இளைய தலைமுறையினர் கற்று உணரவேண்டியது இன்றைய தேவை ஆகின்றது.

ஆகவேதான், தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் செப்டம்பர் 15-ல் அண்ணா பிறந்த நாள் விழா, இயக்கத்தின் வெள்ளி விழாவுடன், கழகத்தோழர்களின் விருப்பத்திற்கு இணங்க எனது பொதுவாழ்வுப் பொன்விழாவினையும் இணைத்து, முப்பெரும் விழா மாநாடு சிறப்பாக நடைபெற உள்ளது.

இதனையொட்டி, கழக மாணவர் அணி நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, பெரியார்.. அண்ணா.. என்னும் தலைப்பில், ஜூலை 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.

ஒரு கல்லூரிக்கு இருவர் மாவட்டப் போட்டிகளில் அனுமதிக்கப்படுவார்கள். கல்லூரி முதல்வரின் ஒப்புதல் கடிதத்துடன் இப்போட்டியில் பங்கேற்கலாம்.

ஏற்கனவே இரண்டு முறை, இதேபோன்ற மாநில அளவிலான பேச்சுப் போட்டியை, எவ்விதக் குறைபாடுகளும் இன்றி வெகு சிறப்பாக நடத்திய அனுபவம் மாணவர் அணிக்கு உண்டு.

அதுபோல், கட்சி சார்பு அற்ற தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்களைக் கொண்டு நடத்தப்படும் மாவட்டப் போட்டியில் தேர்வு செய்யப்படும் மூவருக்கு, முறையே முதல் பரிசு 6 ஆயிரம், இரண்டாம் பரிசு 4 ஆயிரம், மூன்றாம் பரிசு 2 ஆயிரம் வழங்கப்படும்.

மாவட்டப் போட்டிகளில் வெற்றி பெறுவோர், ஏழு மண்டலங்களில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மண்டலப் போட்டியில் பங்கேற்கும் தகுதியைப் பெறுவார்கள். மண்டலப் போட்டிகளில் முதல் மூன்று இடம் பெறுகின்றவர்களுக்கு முறையே 10 ஆயிரம், 7 ஆயிரம், 5 ஆயிரம் என பரிசுத் தொகை வழங்கப்படும். மேலும், மாநிலப் போட்டியில் பங்கேற்கும் தகுதியைப் பெறுவார்கள்.

நிறைவாக, சென்னையில் செப்டம்பர் 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு….

முதல் பரிசு 1 லட்சம் மற்றும் பெரியார், அண்ணா முகம் பதித்த தங்கப் பதக்கம்,
இரண்டாம் பரிசு 50 ஆயிரம் மற்றும் பெரியார் அண்ணா முகம் பதித்த வெள்ளிப் பதக்கம்,
மூன்றாம் பரிசு 25 ஆயிரம் மற்றும் பெரியார், அண்ணா முகம் பதித்த வெள்ளிப் பதக்கம் ஆகிய பரிசுகளும்,

மாவட்டங்களில் வென்றவர்களுக்கான சான்றிதழ்களும் அன்றைய தினம் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் வழங்கப்படுகின்றது. நிறைவு விழாவில் நான் பங்கேற்கின்றேன்.

ஆகவே, தமிழகத்தில் பேச்சுப் போட்டி வரலாற்றில் ஆகக் கூடுதலாக, பத்து லட்சத்திற்கும் மேல் பரிசுத் தொகை வழங்குகின்ற இப்போட்டியில், பெருந்திரளாக மாணவக் கண்மணிகள் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு வேண்டுகிறேன்.

பேச்சுப் போட்டி குறித்து தகவல் பெற விரும்புகின்றவர்கள் கழக மாணவர் அணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் அவர்களை 9943603331 தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு வைகோ அறிவித்துள்ளார். .