அண்ணா சிறுகதைகள் – பலமும் பலவீனமும்: பெருமாள்முருகன்

அண்ணா சிறுகதைகள் – பலமும் பலவீனமும்: பெருமாள்முருகன்anna 8.1.15

_______________________________________________________________

சி.என்.அண்ணாதுரை, அண்ணா, அறிஞர் அண்ணா, பேரறிஞர் அண்ணா என்றெல்லாம் அறியப்பட்டவரும் அழைக்கப்படுபவரும் பெரியாரின் தளபதியாகச் செயல்பட்டுப் பின்னர் திராவிட இயக்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்து முதலமைச்சர் ஆனவரும் 1968இல் அகால மரணமடைந்து வரலாறு காணாத கூட்டம் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் அளவு தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் துயரத்தைக் கொடுத்தவரும் இறப்பிற்குப் பின்னரும் தமிழக அரசியலில் இன்றுவரை உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவருமான அண்ணாவின் இலக்கியத் தரம் பற்றிய விவாதம் ஒன்று தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நடந்தது. இலக்கிய உலகில் எனக்கு ஓரளவு பரிச்சயம் ஏற்பட்டிருந்த சமயம் அது. அப்போது எனக்கு அண்ணாவைப் பற்றி நல்ல   அபிப்ராயம் எதுவுமில்லை.

 

மார்க்சிய இயக்கம் ஒன்றில் செயல்பட்டுக் கொண்டிருந்த காரணத்தால் அதன் பார்வைதான் எனக்கும் இருந்தது. ‘மார்க்சியமா? பெரியாரியமா?’ என்று நூல் வெளியிட்ட இயக்கம் அது. அட்டையில் காரல் மார்க்சின் ஓவியத்தைக் கம்பீரமாகவும் பெரியாரின் ஓவியத்தைச் சுணக்கத்தோடும் போட்டுத் திருப்திப் பட்டு வெளியிடப்பட்ட புத்தகம்.  அண்ணா எனக்குத் தமிழகத்தைத் தவறான பாதைக்கு இட்டுச் சென்ற தலைவர் ஒருவராகவே மனத்தில் பதிந்திருந்தார். புரட்சிகரப் பாதையைத் தவிர அந்தந்தக் காலகட்டத் தேவைகளுக்கு ஈடுகொடுத்துச் செயல்படுபவர்களாக இருப்பினும் அவர்களை அசட்டையாகவும் எதிரிகளாகவும் பார்க்கும் ஒற்றை மனோபாவம் அது. பெரும் மக்கள் திரள் ஒன்றிற்கு அதிகார வாசனையைக் காட்டியவர் என்பது அப்போது எனக்குப் புலப்படவில்லை.

 

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு, எங்கிருந்தாலும் வாழ்க, நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல அவள் படிதாண்டாப் பத்தினியும் அல்ல என்பதாக அவரது பிரபல வரிகள் பல எனக்குத் தெரிந்திருந்தன. திருச்செங்கோடு, திருப்பரங்குன்றம் ஆகிய ஊர்களை ஒப்பிட்டு அவர் எழுதிய ஒருதொடர் என் நினைவில் உள்ளது. திருச்செங்கோடு ராஜாஜியோடு தொடர்புடைய ஊர். அங்கே காந்தி ஆசிரமம் உருவாக்கியவர் அவர். அந்த ஆசிரமத்திலேயே சில ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கிருந்துதான் மதுவிலக்குக்கென்றே ’விமோசனம்’ என்னும் பத்திரிகையை ராஜாஜி நடத்தினார். 1945ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக முறையற்ற வகையில் ராஜாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையொட்டி ராஜாஜிக்கும் காமராசருக்குமான உட்கட்சிப் பூசல் தொடர்ந்தது. திருப்பரங்குன்றத்தில் நடந்த தமிழ் மாகாணக் காங்கிரஸ் கூட்டத்திலும் இது எதிரொலித்தது. (இப்பிரச்சினை தொடர்பான விரிவான பதிவு ம.பொ.சிவஞானம் எழுதிய ‘எனது போராட்டம்’ நூலில் உள்ளது.) இந்தப் பிரச்சினையில் திராவிடர் கழகத்தினர் காமராசர் பக்கம் ஆதரவு தெரிவித்தனர். அண்ணா, காமராசரை ஆதரித்து எழுதினார். ‘திராவிட நாடு’ இதழில் ‘குன்றம் உயர்ந்தது; கோடு தாழ்ந்தது’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதினார் அண்ணா. குன்றம் என்பது காமராசரையும் கோடு என்பது ராஜாஜியையும் குறிப்பாக உணர்த்தும் தொடர் இது. திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற மாநாடு, திருச்செங்கோட்டிலிருந்து ராஜாஜி தேர்வு செய்த முறை ஆகிய இரண்டையும் பற்றிய விமர்சனமாகவும் இத்தொடர் உள்ளது. குன்றம், கோடு ஆகிய சொற்களுக்குரிய பொருளை முரண்பாடாகப் பயன்படுத்தும் புலமைத்திறனும் இதில் இருக்கிறது. நான் திருச்செங்கோட்டுக்காரன் என்பதால் இந்த சமயோசிதம் எனக்குத் தீராத வியப்பை இன்றுவரை தந்துகொண்டிருக்கிறது.

 

என்னுடைய தந்தை தீவிரமான எம்ஜிஆர் பக்தர். எம்ஜிஆருக்கு உடல்    நலமின்றிப் போன அதே காலகட்டத்தில் என் தந்தையின் உடல்நலமும் வெகுவாகக் குன்றிப் போனது. நாற்பத்தைந்து வயதில் கிழவரைப் போல ஆகிவிட்டார். தீவிர மருத்துவம் பார்த்தும் பயனில்லை. எம்ஜிஆர் இறந்து சில மாதங்களுக்குள் அவரும் இறந்து போனார். இது ஒரு ஒத்திசைவு நிகழ்வுதான் என்றாலும் எம்ஜிஆர் இறந்த பிறகுதான் தாடியை மழிப்பேன் என்றும் எம்ஜிஆர் இறந்தால் உடன் இறந்துவிடுவேன் என்றும் எதிரெதிர் சபதம் செய்து வாழ்ந்த மனிதர்களை ஊரில் பார்த்து வளர்ந்ததால் என் தந்தையின் மரணத்திற்கு இப்படி ஒரு ஒத்திசைவு இருப்பது என் மனத்திற்குள் பதிவாக இருக்கிறது.

 

அண்ணாவின் பேச்சாற்றல் பற்றி என் தந்தை சொல்லியிருக்கிறார். அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அவருக்கு எம்ஜிஆரின் இறுதி ஊர்வலத் திற்குப் போக முடியாதது பெருங்குறையாக இருந்தது. எம்ஜிஆர் படங்கள் எல்லாவற்றையும் பார்த்தவர் என் தந்தை. எங்களையும் எம்ஜிஆர் படத்திற்கு மட்டும்தான் கூட்டிப் போவார். அவருடன் சேர்ந்து பார்த்த படங்கள் அனைத்தும் எம்ஜிஆர் நடித்தவையே. அண்ணா வழியில் நடப்பவர் எம்ஜிஆர் தான் என்று சொல்லிக் கருணாநிதியைப் படுகேவலமாகப் பேசுவார். அவர் வழியாக அறிமுகமான அண்ணாவும் எம்ஜிஆரும் சிறுவயதில் எனக்குள் பிம்பங்களாக இருந்தனர். எனினும் என் பதின்வயதில் நான் திமுக ஆதரவாளனாகவும் கருணாநிதியின் பேச்சுக்கு ரசிகனாகவும் ஆகிவிட்டேன். என் வாசிப்பு ஈடுபாட்டினால்  அண்ணா, கருணாநிதி ஆகியோரின் எழுத்துக்களை ஓரளவு படித்தேன். எனினும் அவர்களது  எழுத்துக்களைப் பற்றிப் பெரிதாக நல்ல  அபிப்ராயம் ஏற்பட்டிருக்கவில்லை.

 

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சாகித்ய அகாதமி வெளியிடும் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் அண்ணாவுக்கு நூல் வெளியிடுவது பற்றி   விவாதம் நடந்தது. அவர் எழுதியவை இலக்கியத் தரம் கொண்டவை அல்ல என்றும் அவரை இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சேர்க்கக் கூடாது என்றும் எதிர்ப்பு எழுந்தது. அது ஒருவகையில் அண்ணாவின் எழுத்துக்களை வாசிக்கத் தூண்டியது. அதன்பின் அண்ணாவின் எழுத்துக்களைக் கிடைக்கும் போதெல்லாம் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டேன். வேலைக்காரி, ஓர் இரவு ஆகிய நாடகங்கள் இன்றுவரை பாடத்திட்டத்தில் இருந்து வருகின்றன. படிப்பதற்கேற்ற நாடகப் பிரதிகள் தமிழில் இல்லாத குறை. ஓர் இரவு நாடகம் ஒரே இரவில் நடக்கும் கதை அமைப்பைக் கொண்டது. அதை அண்ணா ஒரே இரவில் எழுதினார் என்று ஒரு தகவல் பரவலாகச் சொல்லப்பட்டு வருகிறது. இவை       திரைப்படங்களாகவும் வெளியாயின. அண்ணாவின் நாவல்கள் சிலவும் அவ்வப்போது குறிப்பிடப்படுகின்றன. சிறுகதைகள்,கவிதைகள், கடிதங்கள், கட்டுரைகள் என ஏராளமாக எழுதியிருக்கிறார்.

 

எல்லாவற்றையும் ஒருசேரத் தீவிரமாக வாசித்தவன் அல்ல நான். ஆனால் அவருடைய சிறுகதைகளை ஓரளவு வாசித்திருந்தேன். அக்கதைகளின் வடிவ வேறுபாடுகள் என் மனத்தில் பதிந்தன. தொலைபேசி உரையாடல் தொகுப்பு ஒன்றையே ஒரு கதையாக்கி இருப்பார். இன்னொரு கதை வரவு செலவு    அறிக்கையாக இருக்கும். உரையாடலே இல்லாமல் ஒரு கதை உருவாகியிருக்கும். விதவிதமான வடிவ வேறுபாடுகளைக் கொண்டு கதை எழுதியிருக்கிறார் என்றால் சிறுகதை வடிவம் பற்றிய உணர்வு அவருக்கு நிச்சயம் இருந்திருக்கும் என்று எனக்குத் தோன்றியது. அப்படியான உணர்வு உடையவர் நிச்சயம் சில நல்ல கதைகளையாவது எழுதியிருப்பார் என்பது என் நம்பிக்கை. அந்த எண்ணத்தில்தான் அண்ணாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுதி ஒன்றை உருவாக்க விழைந்தேன்.

 

ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளாக நவீன இலக்கிய வாசிப்பு உடையவன் நான். என் வாசிப்பு அனுபவம் கதைத் தேர்வில் துணை செய்யும் என்று நம்பினேன். கதைத் தேர்வுக்கு ஒரே நோக்கத்தைத் தான் கொண்டேன். அண்ணா இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் மிக முக்கியமான தலைவர். அவரது எழுத்துக்கள் இன்றுவரை தொடர்ந்து அச்சாகி வருகின்றன.  ஒரு தளத்தில் அவை வாசிக்கப்பட்டும் வருகின்றன. தீவிர இலக்கிய வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான சிலர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் சிறுகதை எழுத்தாளர்களாக அறியப்பட்டார்கள். இன்று வாசிக்க அவர்களின் ஒரு கதைகூடக் கிடைப்ப    தில்லை. கால ஓட்டத்தில் புறந்தள்ளப்பட்டு விடுகிறார்கள். எனக்குச் சட்டென்று நினைவுக்கு வருபவர் பி.எஸ்.ராமையா. சிறுகதையை இயக்கமாக மாற்றிய  மணிக்கொடியின் ஆசிரியராக இருந்தவர். ஆனந்தவிகடனில் தொடர்ந்து ஓராண்டுக்கு வாரம் ஒரு சிறுகதை எழுதியவர். அவரது சிறுகதைகளைப் பற்றி சி.சு.செல்லப்பா பெரிய நூலே எழுதியிருக்கிறார். செல்லப்பாவின் கணிப்பில் பி.எஸ்.ராமையா மாபெரும் சிறுகதை எழுத்தாளர். ஆனால் இன்றைய வாசகருக்கு அவர் கதைகளில் நாட்டமில்லை. இருப்பினும் வாசிக்கக் கதைகள்  கிடைப்பதில்லை. இத்தகைய எழுத்தாளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் அவசியம். நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் எழுதிய எழுத்தாளர்கள் இன்றைய வாசிப்புக்கு உகந்த வகையிலான பத்துக் கதைகளையாவது எழுதி  யிருக்க மாட்டார்களா? அவர்கள் பெயர்களைச் சிறுகதை வரலாற்றில் படிக்கும் வாசகர்கள் கதைகளைப் படிக்க விரும்பினால் ஒற்றைத் தொகுப்பேனும் வேண்டாமா? அவசியமான எத்தனையோ விஷயங்களில் அக்கறை காட்டாத தமிழ்ச் சமூகம் இதில் மட்டும் விழிப்போடு செயல்பட்டுவிடுமா? அண்ணாவும் அந்தப் பட்டியலில் சேர்ந்திருக்க வேண்டியவர்தான். ஆனால் அரசியல் தலைவர் என்னும் கூடுதல் அம்சம் அண்ணாவின் கதைகள் சந்தையில் கிடைப்பதற்கும் ஏதோ ஒரு பிரிவினர் தொடர்ந்து வாசித்து வருவதற்கும் காரணமாக இருக்கிறது.

 

தீவிர இலக்கிய வாசகர் என்றிருக்கும் பிரிவினர் மத்தியில் அண்ணாவை  வாசிக்காமலே அவர் மீது ஒரு எதிர்நிலை முடிவு உள்ளது.  வாசித்துப் பார்த்துத் தம் முடிவை உறுதிப்படுத்திக் கொள்ளவோ மறுபரிசீலனைக்கு உட்படுத்தவோ அவர்களுக்கு ஒரு தரவை உருவாக்கித் தரவேண்டும் என்பதுதான் என் நோக்கம். மற்றபடி என் அளவுகோல் கொண்டு இவைதான் தேறும் என்று தீர்ப்புரைப்பது அல்ல என் வேலை. கறாரான இலக்கியத் தராசு எதையும் நான் பயன்படுத்தவில்லை. அப்படி எதுவும் என்னிடம் இல்லை. இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளைத் தேர்வு செய்வதற்கு மிக எளிதான வழிமுறைகளையே நான் கைக்கொண்டிருக்கிறேன்.  வகைமாதிரியாக இருத்தல், வடிவ வேறுபாடுகளைக் காட்டல், சிறுகதையின் இயல்புகளுக்குப் பொருந்தி வருதல் முதலியவையே அவ் வழிமுறைகள்.

 

என் தேர்வுக்கு ஆதார நூலாகப் பூம்புகார் பிரசுரம் வெளியிட்டுள்ள ‘பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைத் தொகுதி’ என்பதை எடுத்துக் கொண்டேன். டாக்டர் அண்ணா பரிமளம் முயன்று தொகுத்த நூல் இது. அண்ணாவின் கதைகளைக் கால வரிசைப்படி இத்தொகுப்பில் காணலாம். அண்ணாவின் முதல் சிறுகதை ‘கொக்கரகோ’ என்பது. 1934ஆம் ஆண்டு ஆனந்த விகடன் இதழில் வெளியாகி இருக்கிறது. அடுத்து ஒரு நான்கு கதைகளைக் குடியரசு இதழில் எழுதியுள்ளார். மற்ற கதைகள் அனைத்தும் திராவிட நாடு இதழில் வந்தவையாகத் தெரிகின்றன. 1966 ஆம் ஆண்டு வரை எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் திராவிட நாடு இதழில் வெளிவந்துள்ளன.

 

அண்ணா ஆசிரியராக இருந்த இதழ் திராவிட நாடு. பத்திரிகையின் பக்கங்களை இட்டு நிரப்பும் பொருட்டு அவர் பல கதைகளை எழுதியிருக்கலாம். அந்தக் காலத்தில் பத்திரிகையின் பக்கங்களை அதனோடு தொடர்புடைய ஒரு  சிலரே நிரப்பும் நிலை இருந்தது என்பது பலர் வாழ்க்கை காட்டும் விஷயம். பக்கம் நிரப்பும் நோக்கத்திற்காகப் புதுமைப்பித்தன் எழுதிய கதைகள் பற்றி நாம் அறிவோம். அண்ணாவுக்கும் அத்தகைய தேவை ஏற்பட்டிருக்கிறது. புதுமைப்  பித்தனுக்கும் அண்ணாவுக்கும் முக்கிய வேறுபாடு இருக்கக்கூடும். புதுமைப்    பித்தனின் இயல்பான தேர்வு கதையாக இருந்திருக்கக் கூடும். அண்ணா கடைசிபட்சமாகத்தான் கதையைத் தேர்வு செய்திருப்பார் என்று நான் யூகிக்கிறேன்.

 

பத்திரிகையின் பெரும்பாலான பக்கங்களை நிரப்பும் பொறுப்பு ஒருவருக்கே வரும்போது அவர் விதவிதமான வகைகளைக் கையாள்வது அவசியம். அந்த  நிலைதான் அண்ணாவுக்கு ஏற்பட்டிருக்கக் கூடும்.  ஆனால் அவர்  கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து   சிறுகதை வடிவத்தைக் கையாண்டுள்ளார் என்பது முக்கியம்.

 

முப்பதுகளில் எழுதத் தொடங்கிய அவர் நாற்பதுகளில் தீவிரமாகக் கதைகள் எழுதியுள்ளார். நாற்பதுகளில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகள் வந்துள்ளன. அந்தக் காலகட்டம் தமிழ்ச் சிறுகதை வீச்சாக இருந்த காலம் என்பதை நினைவில் கொள்ளலாம். பூம்புகார் பிரசுரத் தொகுதியில் 108 கதைகள் உள்ளன. தம் வாழ்நாளை அரசியலில் கழித்த அவர்,அன்றாடம் பொதுக்கூட்டத்தில் பேசும் நிர்ப்பந்தம் கொண்டிருந்த அவர் எண்ணிக்கையில்  பிரமிக்கத்தக்க அளவுக்கான கதைகள் எழுதியிருக்கிறார் என்பது முக்கியமான செய்தி. 108என்னும் எண்ணிக்கையும்கூட முழுமை பெற்றதாகத் தோன்ற    வில்லை. குமரிக் கோட்டம்,தஞ்சையின் வீழ்ச்சி, பிடிசாம்பல், பரிசு, சிங்களச் சீமாட்டி, ஜெபமாலை, சொர்க்கத்தில் நரகம், விழுப்புரம் சந்திப்பு, சோணாசலம், இலாபநஷ்டம், திருமலை கண்ட திவ்ய ஜோதி,ஒளியூரில், கொலம்பசு முதலிய பல கதைகளை இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் அண்ணாவைப் பற்றி நூல் எழுதியுள்ள சு.சண்முகசுந்தரம் குறிப்பிடுகின்றார். இக்கதைகள் இந்த ஒட்டு மொத்தத் தொகுப்பில் இடம் பெறாத காரணம் தெரியவில்லை.

 

பூம்புகார் பிரசுரம் வெளியிட்டுள்ள வேறு சில சிறு தொகுப்புகளைத் தேடி  வாசித்தேன். அவற்றில் விடுபட்ட பட்டியல் கதைகள் சில இருந்தன. குமரிக் கோட்டம் போன்ற ஒருசில,நாவல் அல்லது குறுநாவல் என்னும் அடையாளத்துடன் வெளியிடப்பட்டவை. கட்டுரைத் தொகுப்பில் சிலவற்றைக் கண்டேன். கதைக்கும் கட்டுரைக்கும் வேறுபாடு காண முடியாத வகையில்     சிலவற்றை அவர் எழுதியுள்ளார்.  அவர் அவற்றை என்ன வகையில் அடக்கினார் என்பது முக்கியம். அப்படிக் கண்டறிவதற்குப் பெருமுயற்சி வேண்டும். அவர் எழுத்துக்கள் தொடர்ந்து வாசிக்கக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன என்பது சந்தோஷமான விஷயம்தான். ஆனால் அவை தொகுக்கப்பட்ட முறை  யில் தெளிவில்லை. சிறுநூல் தொகுப்புகள் என்ன வரையறை வைத்துச் செய்யப்பட்டன என்று தெரியவில்லை. பெருந்தொகுப்பில் ஏன் விடுபாடுகள் நேர்ந்தன என்பதும் தெரியவில்லை.

 

சில கதைகளுக்குத் தலைப்பு மாற்றம் நடந்திருக்கிறது. பாமா விஜயம் என்னும் தலைப்பில் இத்தொகுப்பில் உள்ள கதை ‘அவள் மிகப் பொல்லாதவள்’ என்னும் தலைப்புடையதாகக் குறிப்பிடப்படுகிறது. பரதன், பாண்டியன், சமதர்மன் போன்ற புனைபெயர்களைக் கதைகளுக்கு அவர் பயன்படுத்தியுள்ளார். அவற்றைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். தனித்தனித் தொகுப்புகளாக அண்ணாவின் பார்வையில் வந்தவை எவை, அவர் இறப்புக்குப் பின் வெளியானவை எவை போன்ற தகவல்கள் தெரியவில்லை. இவையெல்லாம் பதிப்பு சம்பந்தமான    விஷயங்கள். அவற்றிற்குள் போனால் என் வேலை வேறொன்றாகிவிடும். எந்த விஷயத்தை எடுத்தாலும் அதற்குள் மூழ்கிப் போய்விடும் அளவு தமிழ் எழுத்தாளன், ஆய்வாளன் செய்வதற்கு ஏராளமான விஷயங்களை விட்டு வைத்திருக்கிறது நம் சூழல். அண்ணா உருவாக்கிய இயக்கம்தான் இன்று ஆட்சிபீடத்தில் இருக்கிறது. அண்ணாவின் நூற்றாண்டை முன்னிட்டு மாவட்டம் தோறும் நூற்றுக்கணக்கில் சிலைகள் வைக்கும் திட்டத்தைவிட அவர் எழுத்துக்கள் அனைத்தையும் முறைப்படி தொகுத்துப் பதிப்பித்தால் நல்லது. அவர் எழுத்தாளர் என்னும் அடிப்படையைவிட அரசியல் தலைவர் என்னும் வகையில் அவர்   எழுத்துக்கள் எதிர்கால ஆய்வுக்கு அவசியத் தேவை. அது நடக்குமானால் அண்ணாவுக்கு மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறைக்கும் முக்கியத் தரவுகளைத் தந்தவர்களாவோம்.

 

அண்ணாவின் கதைகளிலிருந்து எத்தனை கதைகளைப் பொறுக்கி எடுப்பது என்று நான் எந்த வரையறையும் வைத்துக் கொள்ளவில்லை. இந்தத் தொகுப்பில்   பதினான்கு கதைகள் உள்ளன. என் வரையறைகளை நெகிழ்வாக வைத்துக் கொண்டதால் இவை கிடைத்தன. என்னைவிடப் பரந்த மனமுள்ள ஒருவருக்கு இதைவிட ஓரிரு மடங்குக் கதைகள் தேறலாம். இன்னும் கறார்த்தன்மை கொண்ட ஒருவருக்கு எண்ணிக்கை இதைவிடவும் குறையலாம். இலக்கியக் கடிவாளம் அணிந்த வேறொருவர் இவற்றில் எதுவும் தேறாது என்று எல்லாவற்றையும் புறக்கணிக்கவும் செய்யலாம். இந்த வாய்ப்புக்கள் இருப்பதை மனம் கொண்டே என் தேர்வுகளைச் செய்திருக்கிறேன். இதற்காகக் கதைகளை வாசித்தபோது அண்ணாவின் கதைகளைப் பற்றி நான் அவதானித்த சில விஷயங்களைப்   பகிர்ந்து கொள்வது அவசியம் எனக் கருதுகிறேன். அண்ணா தமிழ்ச்        சிறுகதையை உன்னத நிலையில் வைக்க வேண்டும் என்பதற்காகக் கதை எழுதியவர் அல்ல. அவருடைய நோக்கம் கருத்துப் பிரச்சாரம் என்பது தெளிவு.

 

பிரச்சாரம் என்று வந்துவிட்டால் இரண்டு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படும். முதலாவது பிரச்சாரத்திற்குரிய கருத்து. இரண்டாவது அந்தக் கருத்துக்களை கொண்டு சேர்க்க வேண்டிய மக்கள் திரள். இரண்டிலும் அண்ணா மிகத் தெளிவாக இருந்திருக்கிறார் என்பது கதைகள் காட்டும் செய்தி. அவரது கதைகளுக்குக் கரு இல்லை; கருத்துத் தான் உண்டு. பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் உள்ளிட்ட மூடநம்பிக்கை எதிர்ப்பு, சாதி ஏற்றத்தாழ்வு,சுரண்டலை அம்பலப்படுத்துதல் ஆகியவையே அவரது கருத்துநிலைகள். கருத்துநிலைகளுக்கு ஏற்றவாறு கதைகள் உருவாக்கப்படும்போது பாத்திரங்கள் தட்டையானவையாக அமையும். தான் வலியுறுத்தும் கருத்துக்கு ஆதரவாகக் கதையின் எல்லா அம்சங்களையும் வளைத்துக் கொள்ளும் வேலை நடக்கும். கருத்து என்று ஒன்று வந்தால் எதிர்கருத்து ஒன்றும் தானாக வந்து சேர்ந்துவிடும். அந்த எதிர்கருத்தை துவம்சமாக்கிவிடும் வேகம் கதைக்குள் தென்படும். அண்ணாவின் கதைகளில் இவையெல்லாம் உண்டு.

 

கருத்து விளக்கக் கதைகள் எப்போதும் வாசகரை மனத்தில் இருத்தியே எழுதப்படுபவை. தமது கருத்துக்களை ஏற்கெனவே ஏற்றுக் கொண்டுவிட்ட மக்கள் திரள் ஒன்றுக்குச் சந்தோஷம் தரும் நோக்கத்திலும் அத்திரளிடம் கருத்தை வலுப்படுத்தும் நோக்கத்திலும் இவை எழுதப்படுகின்றன. அண்ணாவின் கதைகளில் வாசகர் துருத்திக் கொண்டு முன்னிற்பதைப் பார்க்கலாம். வாசகரை நோக்கி அண்ணாவே கதைக்குள் பேசுவார். அது ஒரு வரியிலிருந்து சில பக்கங்கள் வரை நீளும். அதற்குள் சமகால நிகழ்ச்சிகள், தலைவர்கள் எல்லாரும் வருவதும் உண்டு. இந்தக் கதையை என்ன நோக்கத்தில் எழுதுகிறேன் என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாக அண்ணா அந்த விளக்கங்களை அமைத்துக் கொண்டிருக்கிறார். திராவிட இயக்க ஈடுபாடு கொண்ட சாதாரண நிலையில் உள்ள மக்கள் திரளே அவரது வாசகர்கள். அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பது அண்ணாவின் இலக்கு. எந்த இடம் புரியாது என்று கருது  கின்றாரோ அந்த இடத்தில் விளக்க ஆரம்பித்துவிடுவார்.

 

பிரச்சாரக் கதைகளுக்கென்று தமிழில் ஒரு வடிவம் உருவாகியிருக்கிறது.    குறிப்பாகக் கதையின் முடிவைக் கூறலாம். பொதுவாக வடிவச் செறிவு கொண்ட சிறுகதைகள் பெறும் முடிவு பிரச்சாரக் கதைகளுக்கு ஒத்து வருவதில்லை.  சிறுதையின் முடிவு வாசகரை மேற்கொண்டு சிந்திக்கத் தூண்டுவதாக அமையும். கதை முடியும் போதுதான் கதை தொடங்குகிறது என்று சொல்வதுண்டு. அதாவது வாசகரின் மனத்தில் கதையைப் படித்து முடித்தவுடன் தொடங்கும் சிந்தனைதான் அது. கதை தோற்றுவிக்கும் அலைகள். ஆனால் பிரச்சாரக் கதைகள் வாசகரைச் சிந்திக்க வைப்பவை அல்ல. நுட்பங்களைப் புரிந்து கொண்டு சிந்திக்கும் திறன் கொண்டவர்கள் தம் வாசகர் அல்ல என்னும் தெளிவான தீர்மானம்        கதாசிரியருக்கு இருக்கிறது. ஆகவே கதையே வாசகருக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்துவிடும். வாசகருக்காகக் கதாசிரியரே முழுமையாகச்  சிந்தித்துவிடுகிறார்.

 

தம் கருத்து வாசகருக்குப் போய்ச் சேராதோ என்னும் ஐயம் கதாசிரியருக்கு எப்போதும் தொடர்கிறது. ஆகவே கதையின் முடிவை நீட்டுதல் பிரச்சாரக் கதைகளின்  ஒரு முக்கியக் கூறு. காரணம் கதை சொல்ல வரும் கருத்தினைத் தொகுத்துச் சொல்ல வேண்டிய தேவை கதாசிரியருக்கு வந்துவிடுகிறது. கதை முடிந்த பின்னும் கதாசிரியர் இன்னும் கொஞ்சம் எழுதுவார். இது அண்ணா   விடம் காணும் அம்சம் மட்டுமல்ல, இடதுசாரி எழுத்தாளர்கள்,காந்தியக் கதை எழுதியவர்கள் என எல்லாரிடமும் இருப்பதுதான். அண்ணாவின் கதைகளி   லிருந்து ஓர் உதாரணம் காட்டலாம். ‘சுடுமூஞ்சி’ என்னும் சிறுகதை. ஓரளவு நல்ல கதை இது. இளம் பெண் ஒருத்தி மீது கொண்ட ஆசையின் காரணமாக ஆறுமுக முதலியார் என்னும் முதியவர் அவளைத் திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு தந்திரம் செய்கிறார். அவளுக்கும் அவள் காதலனுக்கும் ஜாதகப் பொருத்தம் இல்லை என்று பொய்யாகச் சொல்லச் செய்து அவர்களைப் பிரித்து அவளை மனைவியாக்கிக் கொள்கிறார். திருமணத்திற்குப் பிறகு அவளுக்கு உண்மை தெரிகிறது. தன் காதலனை வரவழைத்து உண்மையைத் தெரிவிக்கிறாள். அதன்பின் இருவருக்கும் தொடர்பு ஏற்படுகிறது. கதையின் முடிவுப் பகுதி இது:

 

ஆறுமுக முதலியார் வேதத்திடம் போய் விளையாடுகிற நேரமாகப் பார்த்து வேலைக்காரியின் தயவால் ஏகாம்பரத்தை வரவழைத்து அவனிடம் நடந்த ‘சூதை’ச் சொன்ன பிறகுகூட அவளுடைய கோபம் அடங்கவில்லை. ஏகாம்பரம், “அயோக்யன்! இப்படியா சூது செய்தான்? என் கண்ணைப் பறித்துக் கொண்டானே” என்று ஆத்திரத்தோடு கூவினான். ‘நான் ஒரு முட்டாள். ஏமாந்தேன்” என்று அழுதான். “அழாதே கண்ணு! அதனதன் தலைவிதிப்படி நடக்குது. நாமென்ன செய்வது?” என்று இராமி தேறுதல் கூறினாள். தேறுதல் கூறும் கட்டத்தோடு முடிந்துவிடுமா? முந்தானையால் அவன் கண்ணீரைத் துடைத்தாள். ‘உன்னை இழந்தேனே’ என்று கூறியபடி அவளை அவன் அணைத்துக் கொண்டான்.

 

“போதும் கண்ணே! நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்” என்று அவள் புலம்பினாள். அவள் கண்ணீரை அவன் துடைத்தான். அதரத்தின் துடிப்பை முத்தமிட்டு அடக்கப் பார்த்தான். முடியுமா? அவர்கள் இன்பக் கேணியில் இடறி விழுந்தார்கள். பிறகு வருத்தமடையவுமில்லை. முதலியார் புவனேஸ்வரி பூஜை யில் இருக்கும் சமயமெல்லாம் ஏகாம்பரம் இராமியுடன் சல்லாபித்துக் கொண்டிருப்பான். பூஜைக்குப் பிறகு ‘வேதம்’படித்து விட்டு வீடு திரும்புவார், சாமர்த்தியசாலியான ஆறுமுகம். அவர் வீட்டுக்குள் வந்ததும் இராமி ‘சுடுமூஞ்சி’க் காரியாவாள்.  (ப.277)

 

இக்கதைக்குக் கடைசிப் பத்தி தேவையில்லாதது. ‘உன்னை இழந்தேனே என்று கூறியபடி அவளை அவன் அணைத்துக் கொண்டான்’ என்னும் வரியே கதைக்கு முடிவைக் கொடுத்துவிடுகிறது.  ஆசிரியர் சொல்ல விரும்பும் கருத்து ’அணைத்தல்’ என்பதிலேயே புலப்பட்டு விடுகிறது. ஆனால் வாசகருக்கு முழுவதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்னும் நோக்கம் கதாசிரியருக்கு இருப்பதால் இன்னொரு பத்தி எழுத வேண்டியிருக்கிறது.’தேறுதல் கூறும் கட்டத்தோடு முடிந்துவிடுமா?’ என்று வரும் கேள்வி வாக்கியம் எல்லாம் வாசகரை நோக்கிக் கதாசிரியர் பேசுவதுதான். அண்ணாவின் எல்லாக் கதைகளுக்கும் கிட்டத்தட்ட இது பொருந்தும்.

 

பிரச்சாரக் கதைகளின் இன்னொரு அம்சம் பூடகமின்மை. மொழிக்குப் பல    விதமான தொனிகள் உண்டு. வினாவுதலிலும் விடையிறுப்பதிலுமே இவ்வாறு வெளிப்படும் தொனிகள் பற்றித் தமிழ் இலக்கணம் வகைப்படுத்திக் கூறுகிறது. எனில் படைப்பு மொழி இன்னும் எத்தனையோ வகையான பூடகங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கக் கூடியது. மொழி தன்னை வளர்த்துக் கொண்டிருக்  கிறது என்பதற்கு இந்தப் பூடக நிலைகளே சான்று. அண்ணாவின் கதைகளில் பூடகமின்மைதான் எங்குப் பார்த்தாலும். ‘வரவு-செலவு’என்னும் கதை ஒருவரின் தொலைபேசி உரையாடலை மட்டும் சொல்வது. அவர் மூன்று பேரிடம் பேசும் பேச்சுத் தொகுப்பு. அந்தப் பேச்சிலேயே அண்ணா கதை மூலமாக உணர்த்த வரும் விஷயங்கள் சிறு ஒளிவுமறைவும் இன்றி வெளிப்பட்டுவிடுகின்றன. ஆனாலும் அவருக்குத் திருப்தி வருவதில்லை. கதைக்குக் கொஞ்சமும் தேவை  யில்லாத இரண்டு பத்தி விளக்கம் கடைசியில் வருகிறது. எல்லாவற்றையும் புட்டுப் புட்டு வைத்தும் போதாமையை அவர் உணர்ந்திருக்கிறார். தன் வாசகர்களுக்கு இத்தகைய விளக்கம் தேவை என்பதுதான் அவர் கருத்தாக இருந்திருக்கக்கூடும்.

 

மிகச் சாதாரண ஒரு விஷயத்தைப் பூடகமாக்கிச் சொல்ல முயல்வார். ஆனால் அவர் எதை மறைக்கிறார் என்பது கதையின் முதல் பத்தியிலேயே வெளிப் பட்டுவிடும். ‘காமக்குரங்கு’என்னும் கதையில் பெண் வேடமிட்ட ஆண் என்பதைப் பெருரகசியம் போல மறைத்துக்கொண்டே வருகிறார். அவர் மறைக்க எடுக்கும் ஒவ்வொரு சொல்லும் அதை வெளிப்படுத்திக் காட்டவே செய்கின்றது. பிரச்சாரக் கதைகளின் மற்றொரு கூறு அவை அகம் பற்றி அக்கறை காட்டுவ  தில்லை; புறம்தான் அவற்றின் பிரச்சினை. புறம் சார்ந்த பிரச்சினைகள் அகத்தைப் பாதிக்கத்தான் செய்கின்றன. அகப் பிரச்சினைகளைக் கையாளா   விட்டாலும் மன ஓட்டங்கள்கூடக் கதையில் வருவதில்லை. வந்தாலும் அவை வெற்று ஆரவாரச் சொற்களில் எத்தகைய காட்சிச் சித்திரத்தையும் கொடுக்காமல் முடிந்து விடுகின்றன. விதிவிலக்கான ஒரே ஒரு கதை ‘நெஞ்சில் நெருப்பு’. கொலை செய்த ஒருவன் ஊர் ஊராக ஓடிக் கொண்டேயிருக்கிறான். அவன் மன ஓட்டத்தை அண்ணாவுக்கே உரிய அடுக்கு மொழிநடையில் பிடிக்க முயன்றுள்ளார்.  அதன் ஒருபகுதி:

 

ஓடினான், முடியவில்லை. நின்றான், கால்கள் தாமாக நடந்தன. நடந்து கொண்டே இருக்கிறான். பாழ்வெளி, கடுவெளி எங்கும். ஊர் கண்டால் ஓடுகிறான். கதிர் குலுங்கும் வயல் கண்டால் கண்ணீர் பொழிகிறான். கண்ணீரைத் துடைக்கிறான், இரத்தச் சிகப்பு காண்கிறான். நெஞ்சிலே பெரும் சுமை. அது நெருப்பாகித் தகிக்கிறது. பாரம். இறக்கி வைக்க இடமில்லை. வழியில்லை.

 

(ப.929)

பிரச்சாரக் கதைகளின் மற்றொரு தன்மை கதைச் சுருக்கம் சொல்லுதல். அதாவது முன்கதைச் சுருக்கம் கதையின் ஏதாவது ஓரிடத்தில் அமையும். சிறுகதை ஏதாவது ஒரு நிகழ்வை மையமிட்டு எழுதப்படுகின்றது. அந்த நிகழ்வுக்கு முன்னும் பின்னுமானவற்றை ஊகித்துக் கொள்ள எழுத்தாளன் கதையோட்டத்தில் தரும் ஓரிரு தொடர்களோ குறிப்புகளோ போதுமானவையாக அமையும். வாசகனின் கற்பனைக்கு வாய்ப்புத் தரும் பகுதி இது. ஆனால் பிரச்சாரக் கதைகளில், சொல்லப்படும் நிகழ்வுக்கு முன்னால் என்ன நடந்தது என்பதை ஒரு கதைச் சுருக்கம் போல எழுத நேர்கிறது. தேர்ந்தெடுத்துக் கொண்ட நிகழ்வுக்குப் பின்னால் நடந்ததையும் கொஞ்சம் விவரிக்க வேண்டியிருக்கிறது. இது வாசகனைத் தடுமாற விடக்கூடாது என்னும் எண்ணத்தில் செய்வதாகும்.  ‘தங்கத்தின் காதலன்’ உட்படப் பலகதைகள் இத்தன்மை கொண்டவை.

 

இவையெல்லாம் இருப்பினும் பிரச்சாரக் கதைகளுக்குச் சில பலங்களும் உண்டு. குறிப்பாகச் சமகாலத் தன்மை கொண்டவை இக்கதைகள். இலக்கியத்தால் ஏதாவது பருண்மையாகச் சாதிக்க முடியும் என்றால் அது பிரச்சாரக் கதைகளால்தான் முடியும். சமகாலத்தில் நடக்கும் பிரச்சினைகளைப் பேசுவதன் வழியாக இவை பெருந்திரளைச் சென்றடையும் வாய்ப்புப் பெற்றவையாக உள்ளன. கருத்துப் பரப்பலுக்கான வாகனமாக இவை செயல்படுகின்றன. ஆகவே குறிப்பிட்ட விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. அண்ணா அரசியல் தளத்தில் ஏற்றுச் செயல்பட்ட கருத்துகளின் பரவலுக்கு இக்கதைகளும் தம்மால் இயன்ற பங்களிப்பைச் செய்திருக்கக்கூடும். இன்று இலக்கிய மதிப்பீட்டு அளவுகோல் கொண்டு ஒருவேளை இவற்றைப் புறக்கணித்தாலும் இக்கதைகளின் நோக்கம்  சமகாலத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் என்றே நினைக்கிறேன்.

 

பிரச்சாரம் தான் நோக்கம் என்றாலும் இக்கதைகள் வரலாற்றுப் பதிவுகளுக்குப் பயன்படுபவையாகவும் உள்ளன. அண்ணாவின் கதைகளைக் கொண்டு அக்கால நாடக உலகம், மேடைப் பேச்சு விஷயங்கள், வணிகர்களின் நடைமுறைகள், தம் இறுதிநாளில் இருந்த ஜமீன் பரம்பரை நடவடிக்கைகள், செல்வந்தர்களின் வழக்கங்கள் உள்ளிட்டவறறை அறியலாம். அதற்கான தரவுகளாக இக்கதைகள் உள்ளன. இன்னொரு தனித்தன்மை இக்கதைகளில் வரும் பெண்கள். இக்கதைகள் எழுதப்பட்ட காலத்துப் பெண்கள் நிலை இவற்றில் இடம் பெறுவதோடு பெண்கள் தொடர்பான அண்ணாவின் கருத்துகளையும் தருவிக்கலாம். விதவை மணம், பொருந்தா மணம், பாலியல் சுரண்டல் என இவர் கையாண்டுள்ளவை முக்கியமானவை.

 

இவையெல்லாம் கவனத்தில் இருந்தாலும் இன்றைய வாசகர்களின் வாசிப்புக்கு உகந்தவையாக அமையக்கூடிய கதைகளா என்பதை மனத்தில் இருத்திக் கொண்டே இந்தப் பதினான்கு கதைகளைத் தொகுத்துள்ளேன். பிரசங்க பூஷணம், புலிநகம், சுடுமூஞ்சி,சொல்வதை எழுதேண்டா, பூபதியின் ஒருநாள் அலுவல், தீட்டுத்துணி, ராஜபார்ட் ரங்கதுரை, செவ்வாழை, நெஞ்சில் நெருப்பு, உபகாரி உலகநாதன், வரவு-செலவு, கல்லும் கண்ணாடித் துண்டும், சுமார் சுப்பையா, உடையர் உள்ளம் ஆகிய கதைகள். இவற்றில் வகைமாதிரி என்னும் அடிப்படையில்   பிரசங்க பூஷணம், புலிநகம், சுடுமூஞ்சி, சொல்வதை எழுதேண்டா, பூபதியின் ஒருநாள் அலுவல், உடையர் உள்ளம் ஆகிய கதைகளைத் தேர்வு செய்துள்ளேன். நெஞ்சில் நெருப்பு, வரவு-செலவு, கல்லும் கண்ணாடித் துண்டும் ஆகியவற்றை வடிவ முக்கியத்துவம் கருதிச் சேர்த்துள்ளேன்.  செவ்வாழை கதையின் மூலம் பற்றிச் சில ஐயங்கள் உள்ளன. தமிழ்ப்பொழில் பிப்ரவரி-மார்ச் 1989 இதழில் இராம.மணிகண்டன் என்பவர் ‘அண்ணாவின் செவ்வாழையும் சங்கம்புழாவின் வாழைக்குலையும்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். அவரது முடிவு வருமாறு:

 

anna 1சங்கம்புழாவின் வாழைக்குலை அண்ணாவின் செவ்வாழைக்கு முன்பே வெளிவந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. செவ்வாழையின் உள்ளடக்கம் , பின்னணி, பாத்திரங்களின் செயற்திறன் ஆகியவை வாழைக்குலையைப் போன்றே அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் அண்ணாவிற்கு இருந்த ஆங்கில அறிவையும் வைத்துப் பார்க்கும்போது செவ்வாழை எனும் சிறுகதை வாழைக்குலை எனும் கவிதையைத் தழுவி எழுந்ததாக இருக்கலாம் என்று தோன்றுகின்றது. (ப.490)

 

சங்கம்புழவின் ‘வாழைக்குலை’ கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பை      வாசித்தபோது எனக்கும் இக்கருத்து உடன்பாடாகவே தோன்றிற்று. மன்றம் என்னும் திராவிட இயக்க இதழ் ஒன்றில் அண்ணா அளித்த நேர்காணலில் அவரே இதை ஒத்துக் கொண்டிருப்பதாக நினைவு என நேர்ப்பேச்சில் எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் கூறினார். கவிதையைத் தழுவி எழுதிய கதை என்று உறுதிப்படும் ஒன்றை அவரது கதையாகச் சேர்ப்பதைப் பற்றி எனக்குத் தயக்கம் இருந்தது. இருப்பினும் செவ்வாழை பொதுத் தளத்தில்     மிகவும் பிரபலமான கதை என்பதால் இத்தொகுப்புக்குள் சேர்க்க நேர்ந்தது. இந்தத் தழுவல் விஷயத்தையும் மனம் கொண்டே இக்கதையை வாசிக்க வேண்டுகிறேன்.

 

ராஜபார்ட் ரங்கதுரை கதை முதலில் ரங்கதுரை பாகவதர் என்னும் பெயரில் வெளிவந்துள்ளது. இக்கதை 1948இல் எழுதப்பட்டுள்ளது. அதே ஆண்டில் எழுதப்பட்ட கொலம்பஸ் என்னும் கதையும் முக்கியமானது. இரண்டுமே அண்ணாவுக்குப் பெரியாருடன் ஏற்பட்ட முரண்பாடுகளைப் பூடகமாகப் பேசும் கதைகள். ஆனால் இன்று வாசிக்கும்போது இந்தப் பின்னணி துளியும் தெரிவ தில்லை. ராஜபார்ட் ரங்கதுரை கதை அதனளவில் முழுமை பெற்ற நல்ல       சிறுகதையாகவும் உள்ளது. பிரச்சார தொனியே சிறிதும் இல்லாத கதையாகவும் இது விளங்குகிறது. அரசியல் தளத்தில் நடந்த முரண்பாடுகளை அண்ணா தாம் அறிந்த கலைத்துறையாகிய நாடக உலகிற்குள் நடப்பதாக எழுதியுள்ளார். குற்றம் சுமத்தும் தொனியும்கூட இல்லை. குருமூர்த்தி, ரங்கதுரை ஆகிய பாத்திரங்களும் அவற்றின் உறவுநிலையும் பொருந்தி அமைந்த கதை இது. வரலாற்று முக்கியத் துவத்துடன் சிறுகதை அம்சமும் நிறைந்திருக்கும் கதை. எந்தத் தொகுப்பிலும் சேர்வதற்குத் தகுதியுள்ள கதை இது.

 

உபகாரி உலகநாதன், சுமார் சுப்பையா ஆகிய கதைகள் பாத்திர மையக் கதைகள். அண்ணாவின் பாத்திரச் சித்திரிப்புத் திறனுக்கு மட்டுமல்ல, நகைச்சுவை, சமூக விமர்சனம் ஆகியவற்றுக்கும் ஆதாரமான கதைகள் இவை. உலகநாதனும் சுப்பையாவும் உருவாகியிருக்கும் விதம் அண்ணா சிறுகதைத் துறையில் முழுமையாகக் கவனம் செலுத்தியிருப்பாரேயானால் அருமையான கதைகளை எழுதியிருப்பார் என்பதை உறுதிப்படுத்துகின்றன. ராஜபார்ட் ரங்கதுரை,  சுமார் சுப்பையா, உபகாரி உலகநாதன் ஆகிய மூன்று கதைகளும் அண்ணாவின் கதைகளிலேயே ஆகச் சிறந்தவை என்று சொல்லக் கூடியவை.

 

இந்தத் தொகுப்பு நூலுக்குத் தலைப்பாக உள்ள கதை தீட்டுத்துணி. அண்ணாவின் கதைகளில் சாதிப் பெயர்கள் அவ்வளவாக வருவதில்லை. பண்ணையார், ஜமீன்தார் எனக் குறிப்பிடுவதோடு சரி. ஆனால் வணிகம் செய்பவர்களின்  சாதிப் பெயர்களை ஓரளவுக்குக் குறிப்பிட்டு எழுதியுள்ளார். நாயுடு, முதலியார் போன்ற பெயர்கள் வரும். சிங்களச் சீமாட்டி என்னும் கதையில் கொங்கு வேளாளர் சாதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவனைப் பற்றி எழுதுகின்றார். இவற்றில் எல்லாம் அவர் குறிக்கும் சாதிக்கு மாறாக வேறொரு ஆதிக்க சாதிப் பெயரைப் போட்டாலும் கதைக்கு எந்தக் குந்தகமும் நேர்ந்துவிடாது. சாதிப் பெயரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க அவர் கையாளும் உத்தி பார்ப்பனர் என்று கூறிவிடுவது.

 

பண்ணை அடிமைகளாக இருப்போருக்கும் அவர் சாதி குறிப்பிடுவதில்லை. செவ்வாழையில் செங்கோடன் என்ன சாதி என்று தெரியாது. தலித் சாதியாக இருக்கக்கூடும் என்று யூகிக்கலாம். பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களும் ஒருகாலத்தில் பண்ணையடிமைகளாக இருந்துள்ளனர். ஆகவே செங்கோடனின் சாதியை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாது. ஆனால் சாதியை அறியும்படி எழுதப்பட்ட கதை  தீட்டுத்துணி.

 

அந்தோணிசாமி ஆதிதிராவிடன். அவன் பண்ணையாராகிய ஐயர் வீட்டில் அடிமையாக இருக்கிறான். எவ்வளவு விசுவாசமாக உழைத்தபோதும் எஜமானுக்குத் திருப்தி இல்லை. அவனை ‘அந்தினி’ என்றுதான் அழைப்பார். அதற்கு அண்ணா சொல்லும் காரணம்:’பார்ப்பனர், ஏன் பார்ப்பனரல்லாத எந்த எஜமானருமே, அதுபோன்ற அல்லது வேறு அழகான பெயருள்ள எந்த ஆதி  திராவிடனையும் அப்பெயர் முற்றிலும் சொல்லி அழைப்பதில்லை. காரணமா? அப்பெயரின் கடைசியில் இருப்பது ‘சாமி’ என்ற சொல் பாருங்கள்.’ (ப.388) அந்தோணிசாமி மீது ஐயர் திருட்டுக் குற்றம் சுமத்திவிடுகிறார். அவர் அம்மா வின் இறப்புச் சடங்கின்போது மயானத்தில் தீட்டுத்துணியாகிய ஒரு சேலையைத் திருடியதாக. அவன் எவ்வளவோ மறுத்தும் ஐயர் ஒத்துக் கொள்ளவில்லை. தானே தன் கண்ணால் கண்டதாகச் சொல்லிச் சாதிக்கிறார். பஞ்சாயத்து மறுநாளுக்குள் எங்கிருந்தாவது சேலையைக் கொண்டு வந்து ஐயர் வீட்டில் கொடுத்துவிட வேண்டும் எனத் தீர்ப்பும் சொல்லிவிடுகிறது. தீட்டுத் துணிகளை வெளுப்பதற்கு எடுத்துச் சென்ற `வண்ணார் துணி மூட்டையோடு வருகிறார். அதற்குள் அந்தோணிசாமி திருடியதாகச் சொல்லப்பட்ட தீட்டுத்துணியும் இருக்கிறது. இதுதான் கதை.

 

இந்தக் கதை தலித் பாத்திரத்தை மையப்படுத்திய கதை. ஆனால் சகல பலவீனங்களும் கொண்ட கதைதான். அண்ணாவின் வழக்கப்படி கதையின் கடைசியில் ஒருபத்தி அளவுக்குப் பேசுகிறார். எல்லாவற்றையும் வெளிப் படையாகச் சொல்கிறார். கருத்துப் பிரச்சாரம் உண்டு. எனினும் இந்தக் கதையின் தலைப்பு மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. தீட்டுத்துணி என்பது துணியை மட்டும் குறிக்கவில்லை. அந்தோணிசாமியே தீட்டுத்துணி. தீண்டாமை என்பதையும் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொண்டு ஒதுக்கிப் போடும் தன்மையையும் ஒருசேரக் குறிக்கும் இந்தத் தலைப்பு அந்தோணிசாமிக்குக்   குறியீடாக அமைகிறது. அண்ணா கதைகளின் ஒட்டுமொத்த இயல்பும் இந்தக் கதைக்குப் பொருந்திப் போகிறது. ஆகவே இந்தத் தலைப்பைத் தொகுப்புக்குத் தேர்வு செய்திருக்கிறேன்.

 

இவ்வாறாகப் பதினான்கு கதைகள். இத்தொகுப்புத் திட்டத்தை முன்வைத்தவர் நண்பர் ஆ.இரா.வேங்கடாசலபதி. ஊக்கம் கொடுத்து வெளியிடும் கண்ணன். மெய்ப்புப் பார்த்து உதவிய ந.அருள்முருகன். அனைவருக்கும் நன்றி.

 

நன்றி: பெருமாள்முருகன் வலைப் பூ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*