மோட்டார் வாகன ஆய்வாளர் (பிரேக் இன்ஸ்பெக்டர்) பணியிடங்களுக்கு பி.இ பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்து துறையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கு பி.இ. பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய மனுவுக்கு
பதிலளிக்க தமிழக அரசுக்கும், அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 113 இரண்டாம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் (பிரேக் இன்ஸ்பெக்டர்) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்று அரசு பணியாளர் தேர்வாணையம், கடந்த பிப்ரவரியில் விளம்பரம் வெளியிட்டது.
மூன்றாண்டு இயந்திர பொறியியல் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கல்வி தகுதியும் நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த ஜூன் 10-ம் தேதி எழுத்து தேர்வு முடிந்த நிலையில், டிப்ளமோ படித்து இந்த தேர்வில் கலந்துகொண்ட நாமக்கல் மாவட்டம் அக்கியம்பட்டியை சேர்ந்த தனபால் என்பவர், பட்டதாரிகள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியுமா என தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தேர்வாணையத்தில் விளக்கம் கேட்டார்.
இதற்கு பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் பதிலளித்தது.
இந்நிலையில், பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அவர் தன் மனுவில், வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியை மீறி தேர்வு நடவடிக்கை மேற்கொள்வது தன்னை போன்றவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், தமிழக அரசும், டி.என்.பி.எஸ்.சி-யும் மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 26-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.