முக்கிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்: நாடுமுழுவதும் இன்று பாரத் பந்த்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று பாரத் பந்த் நடைபெறுகிறது. தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும், 10 தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், பஸ்கள் ஓடுமா என சந்தேகம் எழுந்துள்ளது.  கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி செலவு ஆகியவற்றை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்து வருகிறது.

கடந்த 15ம் தேதிக்கு பிறகு ஏறு முகத்திலே உள்ள பெட்ரோல் விலை தற்போது ரூ.90யை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த விலை ஏற்றத்திற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், உற்பத்தி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை மத்திய அரசு கூறி வருகிறது. ஆனாலும், பொதுமக்களின் சிரமத்தை குறைக்க பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசோ, வாட் வரியை குறைக்க மாநில அரசோ முன்வரவில்லை. இதன் காரணமாக, தொடர்ச்சியாக அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. 

அதன்படி, இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்திற்கு அகில இந்திய அளவில் சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் முழு அடைப்பில் பங்கேற்காவிட்டாலும், போராட்டங்களை நடத்துவதாக அறிவித்துள்ளது. கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் இணைந்து முழு அடைப்பு போராட்டத்தை நடத்த உள்ளன.  இதே நாளில் இடதுசாரிகளும் தனியாக போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளன. தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமாகா, விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

 அதிமுக மட்டும் ஆதரவு அளிக்கவில்லை. காலை 9 மணிக்கு தொடங்கும் முழு அடைப்பு போராட்டம் மாலை 3 மணி வரை நடக்கிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டுள்ளதால் நாடு முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில்  பாரத் பந்த் போராட்டத்திற்கு பொதுமக்கள் முழு ஆதரவு தர வேண்டும் என்று அனைத்து கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. முழு அடைப்பு போராட்டம் முடிந்ததும் மாலையில் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

முழு அடைப்பு ேபாராட்டத்திற்கு த.வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் மாநிலம் முழுவதும் 65 லட்சம் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ேபாராட்டத்திற்கு தமிழக போக்குவரத்து கழக கூட்டமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தொமுச நடராஜன், சிஐடியு அன்பழகன், எச்எம்எஸ் சுப்பிரமணிய பிள்ளை உள்ளிட்ட 10 தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி 10 முக்கிய தொழிற்சங்கத்தை சேர்ந்த 80,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் நாளைய தினம் 70 சதவீதம் அரசு பஸ்கள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தையொட்டி அண்ணா சாலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்பதால் ஆட்டோக்களும் ஓடாது என்ற நிலை உருவாகியுள்ளது. வாரத்தின் முதல் நாள் நடைபெறும் போராட்டம் என்பதால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வண்ணம் தடுக்க மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லாரிகள் ஓடாது

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் தன்ராஜ் கூறுகையில், டீசல் விலை உயர்வு லாரி உரிமையாளர்களை கடுமையாக பாதித்துள்ளது. டீசல் விலையை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே பாரத் பந்த்துக்கு லாரி உரிமையாளர்கள் தார்மீக ஆதரவு அளிக்கின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள 4 லட்சம் லாரிகள் இன்று ஓடாது. லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைத்து கொள்ள வேண்டும் என்றார்.

Petrol price Hike: barath bandh