டெல்லியில் இன்று(ஏப்., 1), பெட்ரோல் விலை, நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில், லிட்டருக்கு, 73.73 ரூபாயாக விற்கப்பட்டது; சென்னையில், இதன் விலை, 76.48 ரூபாய்.
கடந்தாண்டு, ஜூன் முதல், சர்வதேச சந்தை நிலவரப்படி, தினசரி, பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. டில்லியில் இன்று, பெட்ரோல், டீசல் விலை, லிட்டருக்கு, தலா, 18 காசு உயர்ந்தது. இதையடுத்து, டில்லியில், பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 73.73 ரூபாயாகவும், டீசல் விலை, லிட்டருக்கு, 64.58 ரூபாயாகவும்அதிகரித்தது.
நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில், தற்போது, பெட்ரோல் விலை உயர்ந்து காணப்படுகிறது. டீசல் விலையும், பிப்., 7ம் தேதி விலையை விட, அதிகமாக உள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 76.48 ரூபாயாகவும், டீசல் விலை, லிட்டருக்கு, 67.93 ரூபாயாகவும் இருந்தது.
இந்தாண்டு துவக்கத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த, அவற்றின் மீதான கலால் வரியை குறைக்கும்படி, பெட்ரோலிய அமைச்சகம் வலியுறுத்தியது. ஆனால், பிப்., 1ம் தேதி, பட்ஜெட் தாக்கல் செய்த, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி, அந்த கோரிக்கையை நிராகரித்தார். தற்போது, நான்கு ஆண்டுகளில் இல்லாத வகையில், பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதால், கலால் வரியை குறைக்கும்படி, மீண்டும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தெற்காசிய நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில், பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. பெட்ரோல், டீசல் அடக்க விலைக்கு சமமாக, வரிகள் விதிக்கப்படுவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.