பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.48 உயர்வு..


கடந்த 16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து சாமானிய மக்களுக்கு மனஅழுத்தம் கொடுத்த நிலையில், அடுத்ததாகச் சமையல் கேஸ் சிலிண்டர் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

மானியமில்லாமல் சந்தையில் வாங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு விலை 48 ரூபாயும், மானியத்துடன் பெறும் கேஸ் சிலிண்டர் விலை ரூ.2.34 காசுகளும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

இதன்படி டெல்லியில் மானியமில்லாத 14.2கிலோ எடை கொண்ட சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.698.50க்கும், மானியத்துடன் பெறும் கேஸ் சிலிண்டர் விலை ரூ.493.55க்கும் வழங்கப்படும்.

மற்ற நகரங்களில் மானியத்துடன் பெறும் சிலிண்டர் விலை மும்பையில் ரூ.491.31-க்கும், கொல்கத்தாவில் ரூ.496.65-க்கும், சென்னையில் ரூ.481.84-க்கும் விற்பனை செய்யப்படும்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் மானியத்துடன் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கேஸ் சிலிண்டர் ஆண்டுக்கு 12 வழங்கப்படுகிறது. இதற்கு மேல் தேவை உள்ளவர்கள் சந்தையில் உள்ள விலைக்கு ஏற்ப வாங்கிக்கொள்ளலாம்.

மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை கொல்கத்தாவில் ரூ.723.50-க்கும், மும்பையில் ரூ.671.50-க்கும், சென்னையில் ரூ.712.50-க்கும் விற்பனையாகும். இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலையைக் கடந்த 16 நாட்களாக தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன. அதன்பின் கடந்த இரு நாட்களாக மிகக்குறைந்த அளவு ஒரு காசு முதல் 6 வரை பெட்ரோல், டீசல் மீது விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.

பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ஒன்று 100ரூபாயை நெருங்குவதால், நடுத்தர மக்களும், சாமானிய மக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்நிலையில், சமையல் கேஸ் சிலிண்டர் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி இருப்பது அவர்களை மேலும் சிரமத்துக்கு உள்ளாக்கும்.