முக்கிய செய்திகள்

“பேட்ட” ஆணவக் கொலையைச் சித்தரிக்கும் படமா?: கதை கசிந்ததால் படக்குழு கலக்கம்

ரஜினியுடன், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்கும் பேட்ட படத்தின் கதைக் கரு வெளியே கசிந்து விட்டதால், படக்குழுவினர் கலக்கமடைந்திருக்கின்றனர். படக்குழுவினர் கலக்கத்திற்கு கதை கசிந்தது மட்டுமல்ல, கதையின் கருவும் காரணம் என கோலிவுட் வட்டாரம் பரபரக்கிறது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, யோகி பாபு, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்ட வலுவான நட்சத்திர பட்டாளங்கள் பலரது நடிப்பிலும் உருவாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் 10ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டுதிரைக்கு வரவுள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் மாஸாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்தப் படத்தின் கதைக் கரு வெளியில் கசிந்து விட்டதாக கூறப்படுகிறது. அப்படியானால் கதை என்ன என்றுதானே கேட்கிறீர்கள். உங்களுக்கு சொல்லாமலா… உண்மையா என்று தெரியாது… ஆனால் வெளியானதாக சொல்லப்படும் கதை இதுதான்…

மாலிக் என்ற இளைஞர்(சசிகுமார்) ஒரு ஹிந்து பெண்ணை காதலிக்கிறார். இது அந்தப் பெண் வீட்டாருக்கு தெரிந்து கூலிப் படையை வைத்து சசிகுமாரை கொன்று விடுவார்களாம்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளை மையமாக வைத்து இந்த கதை கார்த்திக் சுப்புராஜ் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியின் நண்பனான சசிகுமாரை கொலை செய்த கும்பலை பழி தீர்ப்பதே கதையாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆணவக் கொலையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருப்பதால், கதைக்கரு வெளியில் தெரிந்து படத்தை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டு விடக் கூடாதே என்பதுதான் படக்குழுவினரின் கலக்கம். குறிப்பாக திரைப்படங்கள் என்றாலே எதிர்ப்பதற்கு காரணம் தேடும் தைலாபுரம் தலைவரின் கவனத்தில் இருந்து தப்பிக்க வேண்டுமே என்பதுதான் அவர்களது கவலை… பில்லியன் டாலர் கணக்கில் பணம் புரளும் தொழிலாச்சே… கலக்கம் வராதா பின்னே….