நேற்று, பிரபஞ்சன் அவர்களை பாண்டிச்சேரிக்குப் போய் பார்த்துவிட்டு வந்தேன். பாண்டிச்சேரி யிலிருந்து விழுப்புரம் போகும் வழியிலுள்ள மதகடிப்பட்டு என்ற ஊரிலுள்ள மணக்குள விநாயகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது.
ஒரு மனிதரை நோய் எவ்வளவு உருக்கக்கூடும் என்பதன் சாட்சியாக அவர் படுத்திருந்தார். எப்போதும் தன்னுடைய தோற்றத்தில் கவனம் எடுத்துக்கொள்ளக்கூடியவர், எழுத்தாளர்களுள் அழகன்.
வாழ்க்கை அவரைப் படாதபாடு படுத்தியபோதிலும் அது குறித்து ஒருபோதும் முறைப்பாடு கூறாதவர். இன்று உயிர்ச்சாறு வற்றிய சருகாகிக் கிடக்கிறார். அவருடைய தம்பி உடனிருந்து கவனித்துக்கொள்கிறார்.
சிற்சிலரை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்வதாக நண்பர்கள் கூறியிருந்தார்கள். என்னைக் கண்டதும் “எப்ப வந்தீங்க தமிழ்?”என்று கேட்டு கைகளைப் பற்றித் தன் நெற்றியில் வைத்துக்கொண்டார். கடைவிழியால் கண்ணீர் வழிந்தது. அழக்கூடாது என்ற என் வைராக்கியம் உடைந்து சிதறியது.
வாழ்வின் அபத்தங்களையும் அற்பத்தனங்களையும் குறித்து எள்ளி நகையாடிச் சிரித்துக் கடந்த பிரபஞ்சன் அவர்கள் இன்றில்லை!
சில நாட்களுக்கு முன்பு வரையில்கூட நண்பர்களோடு கதைத்துச் சிரிக்கக்கூடிய நிலையில் இருந்தவர்தான். ‘ஹீமோதெரபி’சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு படுக்கையில் ஒடுங்கிப்போனார். ஒரு தடவை ஹீமோதெரபி அளிப்பதென்பது நூறு அன்டிபயோடிக்குகளுக்குச் சமானம் என்று டாக்டர் கூறினார். அதைத் தாங்கக்கூடிய உடல்வலுவோ வயதோ பிரபஞ்சன் அவர்களுக்கு இல்லை.
“இந்த வாழ்க்கை முடியிறதுக்குள்ள முடிஞ்ச வரையில எழுதிடணும். ஒரு நாவல் எழுதத் தொடங்கியிருக்கிறேன்.” எத்தனை கனவுகளோடிருந்தார்! சிகரெட் எல்லாக் கனவுகளையும் பொசுக்கிவிட்டது.
தயவுசெய்து புகைப்பிடிக்காதீர்கள். அதன் இறுதி விளைவை உங்களால் தாங்கமுடியாது. நீங்கள் எப்பேர்ப்பட்ட மனத்திடம் பொருந்தியவராயினும்.
புகைப்படம்: புதுவை இளவேனில்
– தாகம் வலைப்பூ பக்கப் பகிர்வில் இருந்து
Please Don’t Smoke: Thamizhnathi