இதுவரை தமிழக முதலமைச்சர் ஒருவர் இப்படி ஒரு செயலுக்காக ‘போஸ்’ கொடுத்திருப்பாரா என்று தெரியவில்லை. முதலமைச்சர் வாகனத்தில் இருந்த சிவப்பு சுழல் விளக்கை அகற்றியபடியே, பெருமிதப் புன்னகை பொங்க ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் காட்சி கொடுத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
மாநில சுயாட்சி என்ற முழக்கத்தை இந்தியத் துணைக்கண்டத்துக்கே வகுத்துக் கொடுத்த தமிழகத்தின் இன்றைய நிலை எப்படி இழித்துக் கொண்டு நிற்கிறது என்பதற்கு இதுவே நேரடியான சாட்சி!
மாநில சுயாட்சி என்ற சொல்லே கூட இப்போதெல்லாம், ‘பொய்யாய்ப் பழங்கதையாய் மெல்லப் போனதுவே’ என்ற பாடலுக்கு ஒப்ப, காலாவதியாகிக் கலைந்தழிந்த ஓவியம் போல, தமிழ் மனத்தின் அடிமண்டியாய் உறைந்து போய்க்கிடக்கிறது.
ஜெயலலிதாவிடம் தங்களில் சிறந்த அடிமை யார் என்று நிரூபிக்கப் போட்டி போட்டவர்கள், இப்போது மோடியிடம் அதை நிரூபிக்கப் போட்டியிட்டு வருகின்றனர்.
இனமானம், இனமானம் என்று முழங்கிய இனம், தற்போது அடிமையாக இருப்பதற்கு போட்டி போடும் புழுக்களின் கூட்டமாக நெளிந்து கொண்டிருக்கிறது.
இதில், ஓ.பன்னீர்செல்வம் சிறந்தவரா, தினகரன் சிறந்தவரா, எடப்பாடி பழனிசாமி எப்படிப்பட்டவர் எனத்தொடரும் அரசியல் ஆய்வுகள் வேறு நம்மைக் குமட்ட வைக்கிறது. வெற்றிவேல் வீரமாக பேசுகிறார், வைத்திலிங்கம் கவனமாக பேசுகிறார், தினகரன் லாவகமாகவும், பக்குவமாகவும் பேசுகிறார், கே.பி.முனுசாமி பதில் சொல்ல முடியாத கேள்விகளை எழுப்புகிறார் என்ற அங்கலாய்ப்புகள் வேறு மறுபக்கம் அருவருக்க வைக்கின்றன.
மக்கள் மந்தையாக இவர்களை வேடிக்கை பார்க்கிறார்கள் என்றால், ஊடகங்களோ சந்தைச் சரக்காக இவர்களை விற்பனை செய்யப்பார்க்கின்றன. தெருச்சண்டையை ரசிக்கும் சுவாரஸ்யம் நமது மக்களுக்கு இருக்கும் வரை ஊடக வியாபாரம் நன்றாகவே நடக்கும் என்பதில் சந்தேகமில்லை. போகட்டும்.
எடப்பாடி பழனிசாமி மோடியின் கடைக்கண் பார்வைக்காக சிவப்பு சுழல் விளக்கை கழற்றியபடி போஸ் கொடுப்பதில் நமக்கு வியப்பு எதுவும் இல்லை. ஆனால், ஒரு பேச்சுக்குக் கூட, இது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல் என்று தமிழகத்தில் மற்ற தலைவர்களில் ஒருவர் கூட சொல்லவில்லையே என்பதுதான் வேதனை அளிக்கிறது.
மாநில சுயாட்சி என்ற முழக்கத்தையே மூச்சாகக் கொண்ட திமுக இதில் எந்தக் கருத்தும் சொல்லாமல் இருப்பது, தமிழகத்தின் எதிர்கால அரசியல் திண்மை குறித்தே நமக்குள் வலி மிகுந்த கேள்வியை எழுப்புகிறது. பிரதமர், மத்திய அமைச்சர்கள் என அனைவரது வாகனங்களில் இருந்தும் தானே சுழல் விளக்குகள் அகற்றப்படுகின்றன என்று கேட்கலாம். பிரதமருக்கும், மற்றவர்களுக்கும் அளிக்கப்படும் பிரம்மாண்டமான பாதுகாப்பு வளையங்கள், படாடோபங்கள் வேறு… மாநிலத்தின் முதலமைச்சர்களுக்கு கூட்டாட்சி அமைப்பின் குறைந்தபட்ச அடையாள அங்கீகாரங்கள் இதுபோன்ற சிலவை மட்டுமே… அவற்றையும் பறித்துக் கொண்டால், ஆளுநராக இருக்கும் கிரண்பேடிகள் ஆட்டிவைக்க, முதலமைச்சர்களாக இருக்கும் நாராயணசாமிகள் அதற்கு இசைவாக ஆட என கூட்டாட்சி அமைப்பு என்பது, வெறும் கூட்டு பொறியலைப் போல ஆகிவிடும். அதனால் தான், பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமாரும், கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவும் சுழல் விளக்குகளை அகற்றும் விவகாரத்தில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மம்தா பாணர்ஜியோ அடுத்த கட்டத்திற்கே போய், நான் இந்தக் கண்றாவியைப் பயன்படுத்துவதே இல்லை என்று முகத்திலறைந்து கூறியிருக்கிறார். அவர்கள் அல்லவா அரசியல் தலைவர்கள்!
சாமானிய மக்களின் அரசு இது என்பதற்காக விஐபி கலாச்சாரம் ஒழிக்கப்படுவதாக கூறும், வேதாந்திகளின் கூட்டம், ஜந்தர்மந்தரில் 40 நாட்களாக வாடிவதங்கும் விவசாயிகளைச் சென்று சந்திக்க விரும்பாதது ஏனோ? அவர்கள் சாமான்யர்கள் இல்லையா? சாமான்ய மக்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லாத டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்தி விட்டு, சிவப்பு சுழல் விளக்குகளை மட்டும் அகற்றி விட்டால் அது சாமானியர்களின் அரசு ஆகிவிடுமா…?
நீட் தேர்வைப் போல, ஜிஎஸ்டியைப் போல மாநிலத்திடமிருந்து எஞ்சியிருக்கும் அதிகாரத்திற்கான அடையாளங்கள் அனைத்தையும் பிடுங்கிக் கொள்ளும் கபளீகர வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியே இது என்பதைத் தவிர, சாமான்ய மக்களின் நலனிற்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது. மாநில உரிமைகளைப் பறிக்கும் வேலையை மத்திய பாஜக அரசு வெகுவேகமாக நிறைவேற்றி வருகிறது என்பதைத் தவிர, இதில் பெருமிதம் பேசுவதற்கு எதுவும் இல்லை. எனினும், இவை குறித்த அக்கறையை அடிமைப்போட்டியில் முட்டி மோதிக்கொண்டிருக்கும் அதிமுகவினரிடம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், திமுகவை அப்படிக் கருதி ஒதுக்கிவிட முடியாது. திமுக கவலை கொள்வதற்கும், களமாடுவதற்குமான முக்கியமான தருணம் இது.
வடமாநிலங்களில் தொடங்கி இருக்கும் அரசியல் நகர்வுகளை திமுக கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேற்குவங்க முதலமைச்சர் மம்தாபாணர்ஜி, பாஜகவிற்கும், மோடித்துவத்திற்கும் எதிராக மாநிலக் கட்சிகள் கைகோர்க்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அதுமட்டுமல்ல.. பூரி ஜகனாதர் ஆலயத்திற்கு சென்ற அவருக்கு எதிராக ஆர்எஸ்எஸ் பரிவாரத்தினர் முழக்கமிட்டுள்ளனர். மம்தா பாணர்ஜி மாட்டுக்கறி தின்பவர் என அப்போது அவர்கள் கூச்சலிட்டுள்ளனர். செய்தியாளர்களிடம்பேசிய போது இதற்கு பதிலடி கொடுத்த மம்தா பாணர்ஜி, ‘நான் என்ன உட்கொள்ள வேண்டும் என்பது எனது உரிமை. அதை அவர்கள் தீர்மானிக்க முடியாது. அவர்கள், அவர்களது வேலை என்னவோ அதைப் பார்க்கட்டும்’ என்று வெடித்துக் கிளம்பி இருக்கிறார். மேற்குவங்க பார்ப்பன வகுப்பில் பிறந்தவர்தான் மம்தா என்றாலும், நவீன பார்ப்பனீயத்தின் மூர்க்கத்தை இனம் கண்டு தாக்கும் தைரியமும், துணிச்சலும் அவருக்கு இருக்கிறதே… பார்ப்பன எதிர்ப்புக்ககாவே இயக்கம் கண்ட தமிழகத்தின் அரசியல் தலைவர்களிடம் இருந்து, இப்படி ஒரு வார்த்தை இதுவரை வரவில்லையே…
தமிழகத்தை புதிய அரசியல் ஆபத்துகள் சூழ்ந்து வருகின்றன. திமுக தனது களப்பணியைத் தீவிரப்படுத்த வேண்டிய தருணம் இது. பாஜகவுக்கு எதிராக அணிதிரளும் தீரமுள்ள தலைவர்களுடன் திமுக கைகோர்க்க வேண்டிய காலக்கட்டம் இது. கலைஞரின் பாணியில், காலத்தால் யாரை எதிர்க்க வேண்டுமோ அவர்களை எதிர்ப்பதற்கான வலிமையை எங்கிருந்தும் நாம் பெற வேண்டும் என்ற வியூகத்தோடு செயலாற்ற வேண்டிய சமயம் இது. விரைவில் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில், பாஜகவுக்கு எதிரான வியூகத்தை வகுக்கத் தொடங்கி உள்னளனர் வடமாநிலத் தலைவர்கள். நிதிஷ்குமார் – சோனியா காந்தி சந்திப்பு, மம்தா – நவீன் பட்நாயக் சந்திப்பு என அதற்கான அடையாள நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இந்த அணியை தெற்குவரை விரிவு படுத்தி வலுப்படுத்த வேண்டிய கட்டாயமும், கடமையும் திமுகவுக்கு இருக்கிறது.
ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு பொதுவான அடையாளத்துடன் பார்க்கப்படும் ஒரே தலைவராக ஸ்டாலின் மட்டுமே இருக்கிறார். கொள்கை சார்ந்த பின்னணியும், கருத்துரீதியான அழுத்தமான உள்ளீடும் உள்ள வலிமையான ஓரே அரசியல் இயக்கமாக திமுக மட்டுமே இருக்கிறது. இதை மக்கள் இன்று உணர்ந்திருக்கிறார்கள். எனவே, மாநில சுயாட்சி, சிறுபான்மையினர் நலன், பகுத்தறிவு சார்ந்த சிந்தனை, அடித்தட்டு மக்களுக்கான நலத்திட்டங்கள் என திமுகவின் அடிநாத செயல்திட்டங்களுக்கும், கருத்தாக்கங்களுக்கும் புத்துயிர்ப்பு தரும் வகையில், ஸ்டாலினின் சொல்லும், செயலும் இனி அமைந்திருக்க வேண்டியது அவசியம். தமிழகம் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறது கலைஞரின் புதல்வரே!
Please take call Mr.M.K.Stalin: It is your time…!
_______________________________________________________________________________