சாமியாராக நினைத்தவன்… பிரதமராகிவிட்டேன்: மோடி (விரக்தி?) பேட்டி (ANI வீடியோ)

சாமியாராக போக வேண்டும் என விரும்பிய தாம் பிரதமராக ஆவோம் என ஒரு போதும் நினைத்ததில்லை என மோடி தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார், பிரதமர் மோடியை டெல்லி, 7 லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் சந்தித்து பேட்டி எடுத்தார்.

கலந்துரையாடல் வடிவிலான இந்த பிரத்யேக நேர்காணலை, இன்று காலை, ANI செய்தி நிறுவனம் வெளியிட்டது.

அதில், மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், எண்ணங்கள், ரசனை உள்ளிட்டவை குறித்து அக்சய்குமார் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகளுக்கு, தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு, பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.

தாம் ஒரு சன்னியாசியாக வேண்டும் என நினைத்திருந்ததாகவும், ஒருபோதும் பிரதமர் ஆவேன் என நினைத்தது இல்லை என்றும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். தாம் ஒருபோதும் கோபப்படுவது கிடையாது என்றும், இதனை இன்றளவும் மக்கள் ஆச்சர்யமாக பார்ப்பதாகவும் மோடி தெரிவித்திருக்கிறார்.

கோபப்படும் அளவுக்கு தாம் எந்த ஒரு சூழலையும் உருவாக்கிக் கொள்வதில்லை என்றும், அப்படியே, கோபம் வந்தாலும், அதை வெளிக்காட்ட முனைந்ததில்லை என்றும் பிரதமர் கூறியிருக்கிறார்.

கோபப்படுவதைக் காட்டிலும், பிரச்சினைக்குரிய தீர்வை எட்டுவதிலேயே, தாம் குறியாக இருப்பதாகவும் மோடி தெரிவித்திருக்கிறார். எம்எல்ஏ ஆவதற்கு முன்பு வரை, தமக்கு வங்கி கணக்கு கிடையாது என ஆச்சர்யமான தகவலையும், அக்சய் குமாருடனான நேர்காணலில் மோடி கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களில் பலரும், தமக்கு இன்றளவும் நண்பர்களாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

தன்னை யார் புறக்கணிக்க முயன்றாலும், அரசியலை கடந்து அனைவருடனும் நட்பு பாராட்டுவதையே, தாம் எப்போதும் விரும்புவதாகவும், மோடி கூறியிருக்கிறார்.

எதிர்க்கட்சிகளில் உள்ள நண்பர்களை, ஆண்டுக்கு, ஒரிரு முறையாவது கண்டிப்பாக சந்தித்து, அளவளாவதாகவும், பிரதமர் தெரிவித்திருக்கிறார். ஒன்று அல்லது இரண்டு குர்தாக்களை, ஆண்டுதோறும், மம்தா பானர்ஜி அவராகவே தேர்வு செய்து, தமக்கு அனுப்பி வருவதாகவும் மோடி கூறியிருக்கிறார்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, டாக்காவிலிருந்து, ஆண்டுதோறும், மூன்று அல்லது நான்கு முறை, இனிப்புகளை அனுப்புவதாகவும், பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

நகைச்சுவை உணர்வோடு பேசுவதில் தமக்கு அலாதி பிரியம் என குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, ஆனால், தற்போது, தான் கூறும் ஒவ்வொரு வார்த்தையையும், சிலர், தங்கள் சுயலாபத்திற்காக தவறாக திரித்துவிடுவதால், அச்சத்துடனேயே, ஒவ்வொரு வார்த்தையும், பேசுவதாக கூறியிருக்கிறார்.

ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக பாடுபட தாம் மிகுந்த ஆசையோடு இருந்ததாக பிரதமர் கூறியிருக்கிறார். வரலாறு போற்றும் தலைவர்களின் சுயசரிதைகளை படிப்பதில், தமக்கு மிகுந்த ஆர்வம் உண்டு என்றும் பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் அக்சய் குமாருடனான நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார்.