‘பி.எம். நரேந்திர மோடி’ திரைப்படத்துக்கு திடீர் தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை விளக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள ‘பி.எம். நரேந்திர மோடி’ எனும் திரைப்படத்தை தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக இருந்த சூழலில் இந்தத் தடை உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கம் வகையில் ‘பி.எம். நரேந்திர மோடி’ எனும் திரைப்படத்தை சந்தீப் சிங் என்பவர் தயாரித்துள்ளார்.

ஓமங்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் நரேந்திர மோடி பாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.

இப்படம் தேர்தல் நேரத்தில் திரையிடப்படுவதாலும், தேர்தலில் மக்களைப் பாதிக்கும் வகையில் சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி மும்பை, டெல்லி, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றங்களில் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்யப்பட்டன.

ஆனால், இப்படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது.

திரைப்படம் கடந்த 5-ம் தேதி திரையிடுவதாக இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டு 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.