பூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்..
ஒரு நாள் யூ டியூப்பில் பயணம், உணவு தொடர்பான வீடியோக்களைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது கிடைத்ததுதான் த லைஃப் ஆப் சோஷியல் பட்டர்ப்ளை என்ற பெயரிலான சேனல்.
2014 ஆண்டு தொடங்கியுள்ளனர். 61 வீடியோக்கள் பதிவிட்டிருக்கிறார்கள். பயணம், உணவு, திருமணம், நட்பு, சடங்குகள், பேஷன் என கலந்திருக்கிறது. ஆனால் எல்லாவற்றிலும் உற்சாகம் குறையாத விவரிப்புகளுடன் கூடிய காட்சிகள்.
முதலில் பார்க்கக் கிடைத்தது கம்போடிய பயணம். இரு வீடியோக்கள் பார்த்தேன். இரு பெண்கள். முதல் பெண் கொஞ்சம் அமைதியாக தோன்றுகிறார். அடுத்தவர் சுட்டிப்பெண்ணாக இருக்கிறார். பாவனைகளில் குறும்பு.
இருவரும் ஆங்கிலமும் ஈழத்தமிழும் கலந்து பேசுகிறார்கள். ஆங்கிலத்தை மிகச் சரளமாகப் பேசுகிறார்கள். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று நினைக்கிறேன்.
முதல் வீடியோவில் அங்கோர்வாட் கோயிலுக்கு எதிரே கூந்தல் நிறைய வட்டமாக மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு, தமிழில் பேசிக்கொண்டே செல்லும் காட்சியில் கவிதை எழுதுகிறார்கள்.
ஏரிக்கரை. சூரியன் மலரும் காலை. செக்கச் செவந்த வானம். பூக்கள் பூக்கும் தருணம் என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. ஒவ்வொரு இடமாக சுற்றுகிறார்கள். பாடலும் கூடவே போகிறது. இடையிடையே பேசுகிறார்கள். ஹோட்டலில் சாப்பிடுகிறார்கள்.
நம்மூர் ஆட்டோக்களைப் போன்ற டுக்டுக் வண்டியில் கம்போடிய கிராமங்களுக்குச் செல்கிறார்கள். தாமரைப் பூக்களைப் பறிக்கிறார்கள். சிறுவர்களோடு விளையாடுகிறார்கள். சிரித்துக்கொண்டே சிலாகித்தபடி இருக்கிறார்கள்.
குறுகுறு பார்வையுடன் மலர்ந்த சிரிப்புடன் பேசும் பெண் கண்களை கொள்ளையடிக்கிறார். மேற்கத்திய நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் மக்களின் பண்பாட்டை சடங்கு சம்பிரதாயங்களைப் பதிவு செய்கிறார்கள்.
த லைஃப் ஆப் சோஷியல் பட்டர்ப்ளை என்ற பெயரைப் போலவே மகிழ்ச்சியும் உற்சாகம் கொண்ட வண்ணத்துப்பூச்சிகளாகவே வீடியோக்களில் அவர்கள் உலாவருகிறார்கள்.
THE LIFE OF SOCIAL BUTTERFLY
நன்றி
சுந்தர புத்தன்