முக்கிய செய்திகள்

அன்பு செழியன் நண்பர் சிக்கியதாக தகவல்!

சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை தொடர்பாக தேடப்பட்டு வரும் பைனான்சியர் அன்புச்செழியனின் நண்பர் போலீசாரிடம் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடன் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட அசோக்குமார், சினிமா பைனான்சியர் அன்புசெழியனிடம் வாங்கிய கடனே தனது முடிவுக்கு காரணம் எனக்கூறி 2 பக்க கடிதம் எழுதி இருந்தார். இதுபற்றி சசிகுமார் அளித்த புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீசார், அன்புசெழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அன்புச் செழியன் குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸ் தனிப்படைகள் தீவிரமாக தேடி வருகின்றன. அவரது மறைவிடம் குறித்து அறிந்துகொள்வதற்காக அவரது நண்பரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில், அன்புச் செழியனின் நண்பர் முத்துக்குமார் ஜாபர்கான்பேட்டையில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகத்தில் சிக்கினார். அவரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, பெரும்புள்ளிகளுக்கு நெருக்கமான அன்புச்செழியன் தலைமறைவாக உள்ளார் எனக் கூறுவதே ஒரு நாடகம் தான் என்றும் பேசப்படுகிறது. நம் நாட்டில் அப்பாவிகள் தான் எளிதில் சிக்குவார்களே தவிர, உண்மைக் குற்றவாளிகள் அத்தனை எளிதில் அகப்பட மாட்டார்கள் என்பதுதானே யதார்த்தம்!

police round up Anbuchezhiyan’s friend