குழந்தைகளுக்கு போலியோ மருந்து கொடுப்பது தொடர்பாக வாட்ஸ்அப்பில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயைத் தடுப்பதற்காக, 5 வயது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் போலியோவைத் தடுக்க ஆண்டுதோறும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், அண்டை நாடுகளில் போலியோ இருப்பதால், நோய் கிருமிகள் பரவுவதைத் தடுக்க, போலியோ சொட்டு மருந்து தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் போலியோ சொட்டு மருந்தில் வைரஸ் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த செய்தியைத் தொடர்ந்து, போலியோ மருந்தைத் தயாரிக்கும் ‘பயோமெடிக்’ என்ற நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இனி வரும் காலங்களில் யாரும் போலியோ சொட்டு மருந்துகளை குழந்தைகளுக்கு தர வேண்டாம் என்ற செய்தி, வாட்ஸ்ஆப்பில் வேகமாக பரவியது. இந்நிலையில், இது குறித்து பதிலளித்துள்ள தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், வாட்ஸ்ஆப்பில் பரவும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட சுமார் 3.2 லட்சம் மருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டன. இதனால், மக்கள் யாரும் வாட்ஸ் ஆப்பில் பரவும் செய்திகளை நம்பி, குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்தை தராமல் இருக்க வேண்டாம்,” என தெரிவித்துள்ளார்.