முக்கிய செய்திகள்

அரசியல் பிரவேசம் குறித்து 31-ந்தேதி அறிவிப்பேன் : ரசிகர் சந்திப்பில் ரஜினி தகவல்


நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

கடந்த முறை ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்த போது, “நமது அரசியல் சிஸ்டம் சரி இல்லை. போர் வரும் போது களத்தில் இறங்குவேன்” என்று அறிவித்தார்.

எனவே, ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவருடைய பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி புதிய அரசியல் கட்சி குறித்து ரஜினி அறிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அன்றும் அறிவிப்பு வரவில்லை.

இந்த நிலையில், இன்று (26-ந்தேதி) முதல் ரஜினி மீண்டும் ரசிகர்களை 31-ந் தேதி வரை சந்திக்கிறார். இதில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற 31-ஆம் தேதி அறிவிப்பேன் என்றார்.

ரசிகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. ரசிகர்களை பார்த்தவுடனேயே தனக்குள் புத்துணர்வு ஏற்பட்டுள்ளது. கதாநாயகன் ஆசையில் தான் சினிமாவுக்கு வரவில்லை. ரஜினி ஸ்டைல் என முதலில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் மகேந்திரன் தான். எனது பிறந்த நாளின்போது நான் தனியாக இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். இந்த முறை என்னை பார்க்க ரசிகர்கள் அதிகளவில் வந்திருக்கின்றனர். ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்ததற்காக வருந்துகிறேன்.

எனது அரசியல் பிரவேசம் பற்றி மக்களை விட ஊடகங்கள் தான் அதிக ஆர்வத்தில் இருக்கின்றன. போர் என்றால் அரசியல் என்று தான் அர்த்தம். அரசியல் எனக்கு புதிது அல்ல, அரசியல் பற்றி தெரிந்ததால் தான் வர தயங்கிறேன். போரில் ஜெயிப்பதற்கு வீரம் மட்டும் போதாது, வியூகம் வேண்டும். கட்டுப்பாடும், ஒழுக்கமும் மிக அவசியம். தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற 31-ஆம் தேதி அறிவிப்பேன் என்றார்.

ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வரும் எதிர்மறை விமர்சனங்களை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். குடும்பத்தின் மீது அக்கறை காட்டுங்கள் என்று ரசிகர்களுக்கு ரஜினி அறிவுரை வழங்கினார்.